தூய்மைப் பணியாளர்கள் மீது கொடுங்கோன்மை போக்கினைக் கட்டவிழ்த்தால் மாபெரும் போராட்டம்; சீமான் எச்சரிக்கை
தூய்மைப் பணியாளர்கள் மீது கொடுங்கோன்மை போக்கினைக் கட்டவிழ்த்தால் மாபெரும் போராட்டம்; சீமான் எச்சரிக்கை
ADDED : ஆக 13, 2025 05:06 PM

சென்னை: சென்னையில் அறவழியில் போராடும் தூய்மைப் பணியாளர்கள் மீது போலீசார் கொடுங்கோன்மை போக்கினைக் கட்டவிழ்த்தால் மாபெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை;தொடர்ந்து கடந்த 13 நாட்களாக தனியார் மயமாக்கலை எதிர்த்தும், தங்களைப் பணி நிரந்தரம் செய்யக்கோரியும், பெருநகர சென்னை மாநகராட்சி தலைமையகத்தின் வெளியே போராடிவரும் தூய்மைப் பணியாளர்களைப் போராட்டக் களத்தில் இருந்து அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் ஏமாற்றமும், கவலையும் அளிக்கிறது. போராடும் தூய்மைப்பணியாளர்களில் பெரும்பாலானோர் ஆதரவற்ற பெண்களாக இருப்பதை மாண்பமை நீதிமன்றம் கவனிக்கத் தவறியது வேதனை அளிக்கிறது.
அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ள உயர்நீதிமன்றம், சென்னையில் போராட்டம் நடத்த அரசால் ஒதுக்கப்பட்ட இடங்கள் எத்தனை மோசமான நிலையில் உள்ளது என்பதை கருத்தில் கொள்ளாதது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.
தங்கள் உழைப்பினை உறிஞ்சி உரிமையைப் பறிக்கும் கொடுங்கோன்மைக்கு எதிராக பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி கடந்த 13 நாட்களாக அறவழியில் தொடர்ந்து போராடிவரும் தூய்மைப் பணியாளர்களின் அடிப்படைக் கோரிக்கைகள் குறித்தும், அவர்களுக்கான வாழ்வாதாரம் குறித்தும் தீர்வுகாண உரிய நீதியை வழங்குவதற்கு மாறாக, அவர்களின் போராட்டத்தை இடையூறாக நீதிமன்றம் கருதியது வேதனை அளிக்கிறது.
தூய்மைப் பணியாளர்கள் தங்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்படுவதாக ஊண் உறக்கமின்றி உரிமைக்காகப் போராடும் நேரத்தில், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் என்று கூறி அவர்களை அகற்ற முற்படுவது பொருத்தமற்றதாகும். நீதிமன்றத்தின் பல்வேறு உத்தரவுகளைக் கடைபிடிக்காத தமிழக அரசு, போராட்டக்காரர்களை அப்புறப்படுத்துவதில் மட்டும் விரைந்து முனைப்புக் காட்டுவது, இதற்காகவே காத்திருந்த திமுக அரசின் தீய நோக்கம் தெளிவாகிறது.
தாங்கள் போராடும் இடத்தை விட்டு அகல மாட்டோம் என்ற தூய்மைப் பணியாளர்களின் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தம்முடைய முழுமையான ஆதரவினை அளிக்கிறது. தூய்மைப்பணியாளர்கள் வேறு எந்த தளத்தில், களத்தில் தம்முடைய போராட்டங்களைத் தொடர்ந்தாலும் அவர்களுக்கு தொடர்ந்து துணைநிற்போம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். அறவழியில் போராடும் மக்கள் மீது போலீசார் தம் கொடுங்கோன்மை போக்கினைக் கட்டவிழ்த்தால் மாபெரும் போராட்டங்களையும் நாதக முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கிறேன், இவ்வாறு அவர் கூறினார்.