'ஈ.வெ.ரா.,வும் ஒரு மண் தான்' கலந்துரையாடலில் சீமான் அதிரடி
'ஈ.வெ.ரா.,வும் ஒரு மண் தான்' கலந்துரையாடலில் சீமான் அதிரடி
ADDED : மே 23, 2025 04:00 AM

சென்னை: ''தமிழகம் ஈ.வெ.ரா., மண் அல்ல; ஈ.வெ.ராவே ஒரு மண்,'' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
உலக தமிழ் கிறிஸ்துவர் இயக்கம் சார்பில், 'வழக்காடுவோம் வாருங்கள்' என்ற தலைப்பில், சீமானிடம் கேள்வி கேட்டு பதில் பெறும் கலந்துரையாடல் நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தவரும், உலக தமிழ் கிறிஸ்துவர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளருமான மைபா சேசுராஜ் பேசுகையில், ''பா.ஜ.,வுக்கு மாற்றாக, தி.மு.க., - அ.தி.மு.க., செயல்படவில்லை; நாம் தமிழர் கட்சி தான் செயல்படுகிறது.
''கிறிஸ்துவர்களின் நலனுக்காக சீமான்தான் குரல் கொடுக்கிறார். எனவே, அவரை நாங்கள் ஆதரிக்கிறோம்,'' என்றார்.
அதைத் தொடர்ந்து, கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து, சீமான் கூறியதாவது:
கடவுள் மறுப்பு, ஜாதி மறுப்பு பற்றி, ஈ.வெ.ரா., இயக்க மேடைகளிலும், மார்க்சிய மேடைகளிலும் பலமுறை பேசியுள்ளேன். கடவுள் மறுப்புக் கொள்கையில் இருந்தபோது, எல்லா மதத்தையும் விமர்சித்திருக்கிறேன். இயேசு பற்றியும், ராமர் பற்றியும் பேசியிருக்கிறேன்.
பல்வேறு மேடைகளில், 12 ஆண்டுகளாக கிறிஸ்துவ வழிபாடு, இயேசு பற்றி பேசிய பேச்சுகளை முழுமையாக வெளியிடாமல், சில பகுதிகளை வெட்டி, ஒட்டி, திராவிட இயக்க ஆதரவாளர்கள் பரப்புகின்றனர். அரசியலில் என் வளர்ச்சியை தடுக்க பார்க்கின்றனர்.
நான் கட்சி துவக்கிய பின், எந்த கருத்துகளை பேசுகிறேன் என்பதை தான் பார்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு, திராவிட அரசியல் பேசுபவர்கள், அச்சத்தில் பரப்பி வரும் எனது பழைய வீடியோக்களை பற்றி கவலைப்படாதீர்கள்.
ஈ.வெ.ராமசாமியை பற்றி, புகழ்ந்துரைத்து மேடைகளில், நான் பேசியது தவறுதான். ஈ.வெ.ரா.,வே பெரிய தவறுதான். இன்று பலர், 'தமிழகம் ஈ.வெ.ரா., மண்' என, சொல்கின்றனர்; ஈ.வெ.ரா.,வே ஒரு மண் தான். 'பரிசுத்த ஆவியால் இட்லி வேகுமா' என கேட்ட கருணாநிதியை மன்னித்து விட்டீர்கள்; என்னை மன்னிக்க மாட்டீர்களா?
இப்போது, நான் பேசும் கருத்துகளை வைத்துதான், என்னை முடிவு செய்ய வேண்டும். கிறிஸ்துவர்களும், இஸ்லாமியர்களும் தமிழர்களாக இருக்கும்போது, அவர்களின் வழிபாட்டு முறையை வைத்து, எப்படி சிறுபான்மையினர் என, அழைக்க முடியும் என்பதுதான் என் கருத்து.
உதாரணத்திற்கு, இசையமைப்பாளர் இளையராஜா ஹிந்து. அவரது மகன் யுவன்சங்கர் ராஜா இஸ்லாம் மதத்தை தழுவியுள்ளார். இப்படி இருக்கும்போது, தந்தை பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்தவர், மகன் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர் என, எப்படி அழைக்க முடியும்?
தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் தான் சிறுபான்மையினர் என்பதே என் கருத்து.
இவ்வாறு கூறினார்.