என் பக்கம் வந்தால் மட்டுமே 'சீட்'; ராமதாஸ் அடுத்த 'அட்டாக்'
என் பக்கம் வந்தால் மட்டுமே 'சீட்'; ராமதாஸ் அடுத்த 'அட்டாக்'
ADDED : ஜூன் 26, 2025 01:50 AM

சென்னை : ''என்னுடன் இருப்பவர்களுக்கு மட்டுமே சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்தார்.
பா.ம.க.,வில் தந்தை ராமதாஸ் - மகன் அன்புமணி மோதலைத் தொடர்ந்து, அன்புமணி ஆதரவு நிர்வாகிகளை நீக்கிவிட்டு, புதியவர்களை ராமதாஸ் நியமித்து வருகிறார்.
திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில், புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலர்கள், தலைவர்கள், மாநில நிர்வாகிகளுடன் நேற்று ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். இதில் எம்.எல்.ஏ., அருள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின், ராமதாஸ் அளித்த பேட்டி:
வரும் ஆகஸ்ட் 10ம் தேதி, பூம்புகாரில் மகளிர் மாநாடு பா.ம.க., சார்பில் மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதுவரை நடக்காத அளவுக்கு மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது குறித்து, புதிய மாவட்டச் செயலர்கள், தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினோம்.
பா.ம.க.,வில் நடக்கும் பிரச்னைக்கு விரைவில் சரியான தீர்வு வரும். பா.ம.க.,வையும், வன்னியர் சங்கத்தையும் 46 ஆண்டுகளாக வழிநடத்தி வருகிறேன்.
பா.ம.க.,வுக்கு நான் தலைவர். வன்னியர் சங்கத்திற்கு அருள்மொழி தலைவர். நிர்வாகிகளை முடுக்கிவிட்டு, கட்சி பணிகளை விரைவுபடுத்த இருக்கிறோம். சட்டசபை தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது. அதனால், இப்போதே கூட்டணியை முடிவெடுக்க வேண்டியதில்லை.
பல தேர்தல்களை சந்தித்த அனுபவம் நிறைய உள்ளது. அதனால், இம்முறை நல்ல, வித்தியாசமான, வெற்றி பெறும் கூட்டணியை அமைப்போம்.
இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு விஷயத்தை உறுதியாகச் சொல்கிறேன்.
இங்கே வந்திருக்கும் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் தான், வரும் சட்டசபை தேர்தலில் நிறுத்தப்படுவர்; அவர்களுக்குத்தான் சீட் கொடுக்கப்படும். அந்த வகையில், என்னோடு இருப்பவர்கள் தான், பா.ம.க., சார்பில் எதிர்காலத்தில் எம்.எல்.ஏ.,க்கள் ஆவார்கள்.
பா.ம.க.,வின் தலைவர் நான்தான். அதனால், எந்த முடிவையும் எடுக்கும், அனைத்து அதிகாரங்களும் எனக்கே உண்டு.
கட்சியில் எனக்கு இருக்கும் அதிகாரத்தையும் மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கையும் பயன்படுத்தி, என்னோடு இருக்கும் நல்லவர்களை, வல்லவர்களை நிச்சயம் எம்.எல்.ஏ.,க்களாக ஆக்குவேன்.
இது போகப்போகத் தெரியும். இப்போதுள்ள ஐந்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா என்பது பரம ரகசியம். அதை இப்போது சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
ராமதாஸின் இந்த பேட்டிக்குப் பின், அன்புமணி ஆதரவாளர்களாக இருக்கும் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.