நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி: சீமான் அறிவிப்பு
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி: சீமான் அறிவிப்பு
ADDED : ஜன 15, 2025 09:16 AM

சென்னை; 'ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக, சீதாலட்சுமி போட்டியிடுவார்' என, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிவித்துள்ளார்.
கடந்த 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில், ஈரோடு கிழக்கு தொகுதியில், தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக, திருமகன் ஈ.வெ.ரா., போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அவருக்கு ஏற்பட்ட உடல் நலம் குறைவு காரணமாக, கடந்த 2023ம் ஆண்டு மரணம் அடைந்தார். கடந்த 2024ல் நடந்த இடைத்தேர்தலில், திருமகன் ஈவெரா தந்தையும், தமிழக காங்கிஸ் முன்னாள் தலைவருமான இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அவரும், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த டிச., மாதம் 14-ம்தேதி காலமானார். இளங்கோவன் மறைவை ஒட்டி, அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, பிப்., 5ம்தேதி இடைத் தேர்தல் நடக்கவுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில், கடந்த இரண்டு முறையும் காங்கிரஸ் போட்டியிட்ட நிலையில், இம்முறை அக்கட்சிக்கு போட்டியிட வாய்ப்பு தரவில்லை. ஆளுங்கட்சியான தி.மு.க., நேரடியாக களமிறங்குகிறது.
வாக்காளர்களை பட்டி போட்டு அடைத்து வைத்து, ஆளுங்கட்சியினர் ஓட்டு சேகரிக்கும் காரணத்தையும், ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறாது எனக்கூறியும், தேர்தலை புறக்கணிப்பதாக, அ.தி.மு.க., - பா.ஜ., - தே.மு.தி.க., என, ஒட்டு மொத்த எதிர்கட்சிகளும் புறக்கணித்துள்ளன.
அதேசமயம், நாம் தமிழர் கட்சி மட்டும் துணிச்சலுடன் ஆளுங்கட்சியை எதிர்த்து போட்டியிடுவதாக அறிவித்தது. அக்கட்சியின் வேட்பாளராக சீதாலட்சுமியை நேற்று சீமான் அறிவித்தார்.
தி.மு.க., மற்றும் நாம் தமிழர் கட்சி இடையில் இருமுனைப் போட்டியாக, இடைத்தேர்தல் களம் மாறியுள்ளது. ஈரோடு ஓடத்துறை அருகே உள்ள மாரப்பம்பாளையத்தைச் சேர்ந்த சீதாலட்சுமி, எம்.ஏ., எம்.பில்., படிப்பை முடித்தவர்.
கடந்த 13 ஆண்டுகளாக, ஆசிரியராக பணியாற்றி வந்த இவர், தற்போது கேபிள் டிவி ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார். கொங்கு வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர்.
கடந்த 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ஈரோடு தொகுதியிலும், 2024- லோக்சபா தேர்தலில் திருப்பூர் தொகுதியிலும் சீதாலட்சுமி போட்டியிட்ட அனுபவம் பெற்றவர்.