தொழிற்சாலைகளுக்கு சுயசான்று கட்டட அனுமதி; சதுரடிக்கு ரூ.125 கட்டணம் நிர்ணயம்
தொழிற்சாலைகளுக்கு சுயசான்று கட்டட அனுமதி; சதுரடிக்கு ரூ.125 கட்டணம் நிர்ணயம்
ADDED : ஜூன் 24, 2026 04:58 AM
சென்னை: தமிழகத்தில், 5,000 சதுரடி வரையிலான தொழிற்சாலை கட்டடங்களுக்கு, சுயசான்று அடிப்படையில் கட்டட அனுமதி வழங்க, சதுரடிக்கு 125 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 2,500 சதுரடி மனையில், 3,500 சதுரடி வரை வீடு கட்டுவதற்கு சுயசான்று அடிப்படையில், 'ஆன்லைன்' முறையில் கட்டட அனுமதி வழங்கப்படுகிறது. தற்போது வரை, 2.5 லட்சத்துக்கு மேற்பட்டோர் கட்டட அனுமதி பெற்றுள்ளனர்.
இதையடுத்து, 7,500 சதுரடி பரப்பளவு நிலத்தில், 5,000 சதுரடி வரையிலான தொழிற்சாலை கட்டடங்களுக்கு, சுயசான்று முறையில் கட்டட அனுமதி வழங்கப்படும் என, கடந்த ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்டது.
இதற்கான அரசாணை, 2025 அக்., மாதம் வெளியிடப்பட்டது. இருப்பினும், புதிய மென்பொருள் தயாரிக்கும் பணிகள் முடியாததால், இத்திட்டம் அமலுக்கு வராமல் இருந்தது.
இந்நிலையில், தொழிற்சாலை கட்டடங்களுக்கு சுயசான்று முறை கட்டட அனுமதி தரும் வசதி அமலுக்கு வந்துள்ளதாக, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாநகராட்சி பகுதிகளில் இதற்கு சதுரடிக்கு, 125 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவில் அமைந்துள்ள நிலங்களுக்கு சதுரடிக்கு, 16 ரூபாய், வரன்முறை கட்டணமாக சதுரடிக்கு, 46 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோன்று, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளின் நிலைக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கட்டணம் குறையுமா?
இது தொடர்பாக, இந்திய கட்டுமான வல்லுனர் சங்கத்தின் தென்னக மைய நிர்வாகி எஸ்.ராமபிரபு கூறியதாவது:
வீடுகளுக்கு வழங்கப்பட்டது போன்று, தொழிற்சாலைகளுக்கு சுயசான்று முறையில் கட்டட அனுமதி வழங்குவது வரவேற்கத்தக்கது. நில உரிமை, அங்கீகாரம், வகைப்பாடு சார்ந்த சில அடிப்படை ஆவணங்களை பதிவேற்றம் செய்து, எளிதாக கட்டட அனுமதி பெறலாம்.
நிலம் தொடர்பான விபரங்கள், கட்டட வரைபடம் போன்ற அடிப்படை விபரங்கள் மட்டுமே இதில் கேட்கப்படுகின்றன.
தற்போது, மாநகராட்சி பகுதிகளில், ஒரு சதுரடிக்கு, 125 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 5,000 சதுரடிக்கு, 6.25 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த கட்டணங்களை, 20 சதவீதம் வரை குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
