பத்திரத்தில் கட்டட மதிப்பு கணக்கிட சுயசான்று முறை: பதிவுத்துறை அறிவிப்பு பதிவுத்துறை அறிவிப்பு
பத்திரத்தில் கட்டட மதிப்பு கணக்கிட சுயசான்று முறை: பதிவுத்துறை அறிவிப்பு பதிவுத்துறை அறிவிப்பு
ADDED : செப் 09, 2026 11:12 PM

சென்னை: பத்திரப்பதிவின்போது, சொத்து வாங்குவோர் குறிப்பிடும் கட்டட மதிப்பை, சுயசான்று அல்லது பொறியாளர் வாயிலாக கணக்கீடு செய்யும் முறையை, பதிவுத் துறை அறிவித்துள்ளது.
சார் - பதிவாளர் அலுவலகத்தில், பத்திரங்களை பதிவு செய்யும்போது, நிலத்தின் மதிப்பு, கட்டடத்தின் மதிப்பு ஆகிய விபரங்களை தெரிவிக்க வேண்டும். இதில், நிலத்துக்கு வழிகாட்டி மதிப்பு கடைப்பிடிக்கப்படுகிறது.
அதேபோன்று, கட்டடங்களுக்கான மதிப்பை, பொதுப்பணித் துறை விலைப்பட்டியல் அடிப்படையில் கணக்கிட வேண்டும். இதில், சொத்து வாங்குபவர், பத்திரத்தில் குறிப்பிட்ட மதிப்புகள் சரியா என்பதை, சார் - பதிவாளர்கள் கள ஆய்வு வாயிலாக உறுதி செய்ய வேண்டும்.
இந்த நடைமுறையால், பெரிதாக வருவாய் கிடைக்கவில்லை என்றாலும், சார் - பதிவாளர்களின் பணி நேரம் விரயமாகிறது. எனவே, இதை எளிமைப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக, பதிவுத்துறை தலைவர் அருண்சுந்தர் தயாளன் பிறப்பித்த உத்தரவு:
↓கட்டடத்தின் கட்டுமான பரப்பளவு, 2,500 சதுரடிக்குள் வரும் நிலையில், சுயசான்று மதிப்பு அல்லது பொதுப்பணித் துறை தள விலை விபர பட்டியல் அடிப்படையில், கட்டட மதிப்பை குறிப்பிடலாம்
↓கட்டட பரப்பு, 2,500 சதுரடிக்கு மேல், மதிப்பு 1 கோடி ரூபாய் வரை இருப்பின், சுயசான்று மதிப்பு அல்லது பொதுப்பணித் துறை தள விலை விபர மதிப்பு, இதில் எது அதிகமோ, அதன் அடிப்படையில் முடிவு செய்யலாம்
↓கட்டட மதிப்பு ஒரு கோடி ரூபாய் முதல், 5 கோடி ரூபாய் வரை இருந்தால், அங்கீகரிக்கப்பட்ட கட்டட மதிப்பீட்டாளர் அறிக்கை, பொதுப் பணித் துறை பட்டியல், இதில் எது அதிகமோ, அதை இறுதி செய்யலாம், இதில் கள ஆய்வு இன்றி, மதிப்பை சார் - பதிவாளர் ஏற்கலாம்
↓கட்டட மதிப்பு, 5 கோடி ரூபாய்க்கு மேல் இருந்தால், அங்கீகரிக்கப்பட்ட கட்டட மதிப்பீட்டாளர் அறிக்கை அல்லது பொதுப்பணித்துறை விலை பட்டியல் அடிப்படையில் முத்திரை தீர்வை, பதிவு கட்டணம் வசூலிக்கலாம். இந்த மதிப்பை, பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் களப்பணி வாயிலாக இறுதி செய்யலாம்
↓கட்டடங்கள் மறைக்கப்படுவதை தடுக்க, பத்திரத்தில் சொத்தின் புவியிட தகவல் அமைப்பு வரைபடம் இணைப்பது கட்டாயம்
↓இந்த வழிமுறைகளை கடைப்பிடிக்க தவறும் அதிகாரிகள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
