மருந்து கடையில் தாய்ப்பால் விற்பனை: கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்
மருந்து கடையில் தாய்ப்பால் விற்பனை: கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்
ADDED : மே 31, 2024 11:46 AM

சென்னை: வர்த்தக ரீதியில் தாய்ப்பால் விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், சென்னை மாதவரத்தில் மருந்து கடை ஒன்றில் பிளாஸ்டிக் பாட்டில்களில் தாய்ப்பாலை சட்டவிரோதமாக விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து உணவுத்துறை அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர்.
தாய்ப்பால் சுரக்காத தாய்மார்களுக்கு உதவும் வகையில், அரசு சார்பில் தாய்ப்பால் வங்கிகள் நடத்தப்படுகின்றன. இவை பெரும்பாலும் அரசு மருத்துவமனைகளிலேயே அமைந்திருக்கும். இந்நிலையில் ஆன்லைன் வாயிலாகவும், தனியார் அமைப்புகள் மூலமாகவும், தாய்ப்பால் விற்பனை நடந்து வருகிறது. இது விதிமீறல் என, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர அமைப்பு கூறியுள்ளது. எனவே, வர்த்தக ரீதியில், தாய்ப்பால் விற்பனை செய்யப்படுவதற்கு, மத்திய அரசு தடை விதித்துள்ளது. கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், சென்னை மாதவரத்தில் சட்டவிரோதமாக தாய்ப்பால்கள் பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்படுவதாக உணவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, உணவுத்துறை மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், கே.கே.ஆர் கார்டன் பகுதியில் செம்பியன் முத்தையா என்பவரின் கடையில், 50க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் தாய்ப்பால்கள் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து, அனைத்து பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள், நடத்திய விசாரணையில், புரதச்சத்து மருந்தகள் விற்பனை செய்ய மட்டுமே கடைக்கு உரிமம் தரப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.