கொலை வழக்கில் இருந்து பழனிசாமியை காப்பாற்றியவர் செங்கோட்டையன் தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி பேச்சு
கொலை வழக்கில் இருந்து பழனிசாமியை காப்பாற்றியவர் செங்கோட்டையன் தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி பேச்சு
ADDED : நவ 02, 2025 01:44 AM
வத்தலக்குண்டு: ''கொலை வழக்கில் சிக்கிய அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை காப்பாற்றியவர் செங்கோட்டையன். ஆனால், அவரையே கட்சியில் இருந்து நீக்கி இருக்கிறார் பழனிசாமி,'' என தி.மு.க., அமைப்பு செயலர் ஆர். எஸ். பாரதி பேசினார்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் நடந்த தி.மு.க., முப்பெரும் விழா சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
வாக்காளர் பட்டியல் திருத்தம் பெயரில் அவசர கதியில் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது பா.ஜ.,வின் ஓட்டு திருட்டு செயல். 40 நாட்கள் தி.மு.க., தொண்டர்கள் விழிப்போடு இருந்து தடுக்க வேண்டும்.
இத்தகைய பா.ஜ., வோடு இணைந்துள்ள அ.தி.மு.க ., அடுத்த தேர்தலில் காணாமல் போகும். அக்கட்சியின் பொதுச் செயலராக உள்ள பழனிசாமி, தன் சொந்த சகோதரர்களையே கொலை செய்த வழக்கில் குற்றவாளி யாக சேர்க்கப்பட்டவர்.
இவரை கொலைக் குற்ற வழக்கில் இருந்து காப்பாற்றியவர் தான், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். ஆனால், இன்று செங்கோட்டையனையே அ.தி.மு.க.,விலிருந்து பழனிசாமி நீக்கி உள்ளார்.
தன்னை கொலை வழக்கில் இருந்து காப்பாற்றியவரையும் கூட இரக்கமின்றி கட்சியில் இருந்து நீக்கும் மனப்போக்கு கொண்டவர் பழனிசாமி. அவர், சசிகலாவின் கால்களை பிடித்து முதல்வரானவர். தன்னுடைய சுய நலத்துக்காக யாரையும் எதற்கும் பலிகொடுக்க தயங்காதவர்.
அ.தி.மு.க., தொண்டர்கள் தற்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இன்றி அனாதைகளாக உள்ளனர். அவர்கள், இனி வந்து சேர வேண்டிய ஒரே இடம் தி.மு.க.,தான். அவர்களையும், அரவணைத்து செல்லக்கூடிய ஒரே தலைவர் ஸ்டாலின்தான்.
இவ்வாறு அவர் பேசினார்.

