அவரவர் கடமையை சரிவர செய்தால் யாருடைய உரிமையும் பாதிக்காது மூத்த வழக்கறிஞர் பராசரன் பேச்சு
அவரவர் கடமையை சரிவர செய்தால் யாருடைய உரிமையும் பாதிக்காது மூத்த வழக்கறிஞர் பராசரன் பேச்சு
ADDED : அக் 12, 2025 03:15 AM

சென்னை: “ஒவ்வொருவரும் தங்கள் கடமையை சரிவர செய்தால், யாருடைய உரிமையும் பாதிக்காது,” என, மூத்த வழக்கறிஞர் கே.பராசரன் பேசினார்.
மத்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரலும், பத்ம பூஷன் விருது பெற்ற மூத்த வழக்கறிஞருமான கே.பராசரன், சட்டப்பணியில் ஈடுபட்டு, 75 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில், நேற்று பவள விழா கொண்டாடப்பட்டது.
ராமஜென்ம பூமி போன்ற வழக்குகளில் பராசரன் ஆஜரானது; அவரின் வாத திறமை போன்றவை குறித்து, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி ஆகியோர் பேசினர்.
தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா பேசும்போது, “வழக்குகளில் ஆஜராகும்போது, முழுமையாக தயாராக வேண்டும்.
“பொறுமையாக வாதங்களை முன்வைக்க வேண்டும் என்பது போன்ற தகுதிகளை, மூத்த வழக்கறிஞர் பராசரனிடம் கற்றுக்கொண்டேன்,” என்றார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன் எம்.எம்.சுந்தரேஷ், விக்ரம்நாத், கே.வி.விஸ்வநாதன் உள்ளிட்டோரும், வழக்கறிஞர் பராசரனை பாராட்டி பேசினர்.
மூத்த வழக்கறிஞர் பராசரன் ஏற்புரையில் பேசியதாவது:
என் வாழ்நாளில் ஒவ்வொரு தவறுகளிலும் இருந்தும் பாடம் கற்றுக்கொண்டேன். ஒவ்வொருவரும் அவர்களது கடமையை சரிவர செய்தால், யாருடைய உரிமையும் பாதிக்காது.
நீதிமன்றத்தில், உயர்ந்த கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை, எனக்கு கற்று தந்தவர் தந்தை. அவரிடம் இருந்து சட்டங்களை மட்டுமல்ல; ஒழுக்கத்தை யும் கற்றுக்கொண்டேன்.
நேர்மை, ஒருமைப்பாடு ஆகியவை மிக முக்கியம். இந்த சமூகத்துக்கு உரிய பங்களிப்பை வழங்க வேண்டும். அங்கிருந்துதான் நீங்கள் அனைத்தையும் பெறுகிறீர்கள் என்பதை, கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.