ADDED : ஜூலை 24, 2025 10:37 PM
சென்னை:''வழக்குகளின் விசாரணைக்கு ஆஜராகும்போது, முழு அளவில் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும்,'' என, இளம் வழக்கறிஞர்களுக்கு, சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் அறிவுரை வழங்கினார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். இதையொட்டி, சென்னை உயர் நீதிமன்றம் சார்பில், நேற்று மாலை அவருக்கு வழியனுப்பு விழா நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் பேசுகையில், ''நீதிபதியாக பதவி வகித்த ஒன்பது ஆண்டுகளில், நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், 37,488 வழக்குகளுக்கு மேல் தீர்ப்பு அளித்துள்ளார்,'' என்றார்.
பின், ஏற்புரையில் நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் பேசியதாவது:
நீதிபதிகள் வருவர், போவர். ஆனால், நீதிமன்றம் நீடித்து, நீதியை வழங்கும். மனைவியை விட, வழக்கறிஞர்களை அதிகளவில் நம்பும் கட்சிக்காரர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், வழக்குகளில் ஆஜராகும்போது இளம் வழக்கறிஞர்கள், முழு அளவில் தங்களை தயார்படுத்தி வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மூத்த நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் பணி ஓய்வு பெறுவதை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை, 55 ஆக குறைகிறது. காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை, 20 ஆக அதிகரித்துள்ளது.