தன்னார்வலர்களை நியமித்து கரூர் சம்பவம் தவிர்த்திருக்கலாம்; தமிழக அரசு உயரதிகாரிகள் சொல்கின்றனர்
தன்னார்வலர்களை நியமித்து கரூர் சம்பவம் தவிர்த்திருக்கலாம்; தமிழக அரசு உயரதிகாரிகள் சொல்கின்றனர்
ADDED : அக் 01, 2025 06:03 AM

சென்னை: 'ஒவ்வொரு கட்சியிலும் போலீசாரை மட்டுமின்றி, தன்னார்வலர்களையும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவர். அவ்வாறு தன்னார்வலர்களை போட்டிருந்தால், கரூர் சம்பவம் நடந்திருக்காது' என, தமிழக அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
தமிழக அரசின் செய்தி தொடர்பாளரான, வருவாய் துறை செயலர் அமுதா, உள்துறை செயலர் தீரஜ்குமார், தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம், மக்கள் நல்வாழ்வு துறை செயலர் செந்தில்குமார் ஆகியோர் நேற்று அளித்த பேட்டி:
கரூரில் பிரசாரத்திற்கு கேட்கப்பட்ட இடம் வேறு; கொடுக்கப்பட்ட இடம் வேறு என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. முதலில், லைட் ஹவுஸ் ரவுண்டானா அருகில் இடம் கேட்கப்பட்டது. அங்கு பெட்ரோல் பங்க், அமராவதி பாலம், கால்வாய் உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, அந்த இடத்தை தரவில்லை.
அடுத்து, உழவர் சந்தை அமைந்துள்ள சாலையை கேட்டனர். அங்கு, 5,000 பேர் மட்டுமே கூட முடியும். த.வெ.க., பிரசாரம் நடப்பதற்கு முன், ஒரு அரசியல் கட்சி கூட்டம் அங்கு நடந்தது. அதில், 15 ஆயிரம் பேர் வரை எந்தவித சிரமமும் இன்றி பங்கேற்றனர். அதனால், இந்த இடத்தை தேர்வு செய்து, 26ம் தேதி த.வெ.க., சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டு, அனுமதி வழங்கப்பட்டது.
பிரசாரத்திற்கு, 10 ஆயிரம் பேர் வரை வருவர் என்று தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே நடந்த கூட்டங்களில் அதிகம் பேர் பங்கேற்றனர். எனவே, 20 ஆயிரம் பேர் வரை வருவதற்கு வாய்ப்புள்ளது என, உளவு துறையால் கணிக்கப்பட்டது.
வழக்கமாக, 50 நபருக்கு ஒரு போலீசார் என்பதற்கு பதிலாக, 20 நபருக்கு, ஒரு போலீசார் என்ற அளவில், 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விஜய் வருவதற்கு முன்பே, அங்கு எதிர்பார்த்த கூட்டத்தை விட இரண்டு மடங்கு இருந்தது. அவர் பின்னால் வந்தவர்களால், கூட்டம் மேலும் அதிகரித்தது. அங்கு, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கூடி விட்டனர்.
பிரசாரம் துவங்குவதற்கு முன்பே நெரிசல் ஏற்பட்டதா என்று கேட்கின்றனர். அங்கு பகல், 12:00 மணியில் இருந்தே கூட்டம் காத்திருக்கிறது. பலர் தண்ணீர் இல்லாமல் சோர்வாகி விட்டனர். இதனால், கீழே அமர்ந்து ஓய்வெடுக்க ஆரம்பித்து விட்டனர். விஜயின் பிரசார வாகனம் பெரியது. எனவே, வாகனத்தின் இருபுறங்களிலும் இருந்தவர்கள் ஓரம் போக ஆரம்பித்தனர். பின்னால் வந்தவர்கள், அவரது முகத்தை பார்க்க முன்னால் வந்தனர். இதனால், நெரிசல் ஏற்பட்டது.
பிரசாரத்தின் போது மின்சாரம் தடை செய்யப்பட்டதா என கேள்வி எழுப்புகின்றனர். இதற்கு கரூர் மண்டல மின் வாரிய தலைமை பொறியாளர் தெளிவான விளக்கம் அளித்துள்ளார். கூட்டம் முண்டியடித்து சென்ற போது, அங்கு, 'ஜெனரேட்டர்' வாயிலாக வழங்கப்பட்ட மின்சாரம் மட்டுமே தடைபட்டு, மின் விளக்குகள் அணைந்தன; மற்ற இடங்களில் மின் விளக்குகள் எரிந்தன.
போலீசார் தடியடி நடத்தினரா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. விஜய் பிரசார இடத்திற்கு அருகே வர துவங்கி விட்டார். அங்கு பிரமாண்ட கூட்டம் இருந்தது. அதை மீறி போக வேண்டாம் என, ஒரு கி.மீ.,க்கு முன்பே கூட்ட ஒருங்கிணைப்பாளரிடம் கூறப்பட்டது; அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதனால், சாலையில் கூட்டத்தை கலைக்க, போலீசார் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிரசாரத்தின் போது எதற்காக ஆம்புலன்ஸ்கள் அடிக்கடி வந்தன என்றும் கேட்கின்றனர்.
அங்கு த.வெ.க., வாயிலாக ஏழு ஆம்புலன்ஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன; பலர் மயக்க மாகி விட்டனர் என்ற தகவல் கிடைத்ததும், அந்த ஆம்புலன்ஸ்கள் தான் அங்கு சென்றன.
நிலைமை மோசமானதாக, 'ஒயர்லெஸ்' வாயிலாக போலீசாரிடம் இருந்து தகவல் கிடைத்ததும், அரசின் ஆம்புலன்ஸ்கள் அங்கு சென்றன.
ஒவ்வொரு கட்சியிலும் போலீசார் மட்டுமின்றி, தன்னார்வலர்களையும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவர். அவ்வாறு தன்னார்வலர்களை போட்டிருந்தால் பிரச்னை நடந்திருக்காது. விஜயின் மற்ற பிரசாரங்கள், மாநாடுகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.
கரூர் சம்பவம் தொடர்பாக, ஒரு நபர் விசாரணை ஆணையத்தை, தமிழக அரசு அமைத்துள்ளது. மூத்த போலீஸ் அதிகாரி தலைமையிலும் விசாரணை நடக்கிறது. விசாரணை முடிந்தால் மட்டுமே உண்மை தெரியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.