செந்தில் பாலாஜிக்கு மாதம் 1.05 லட்சம் ரூபாய் சம்பளம்'
செந்தில் பாலாஜிக்கு மாதம் 1.05 லட்சம் ரூபாய் சம்பளம்'
UPDATED : பிப் 01, 2024 07:47 AM
ADDED : பிப் 01, 2024 07:20 AM

செங்கம்: ''அரசு வேலையே செய்யாமல், புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு, மக்களின் வரிப்பணத்தில் மாதம், 1.05 லட்சம் ரூபாய் என, எட்டு மாதமாக, 8.40 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கும் ஆட்சியாக, தி.மு.க., உள்ளது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சட்டசபை தொகுதியில் நேற்று (ஜன., 31) நடந்த, 'என் மண், என் மக்கள்' நடைபயணம் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
நாம் அனைவரும் அரசியல் மாற்றத்திற்கு தயாராகி இருக்கிறோம். தமிழகத்தில் அரசியல் மாற்றம் வேண்டும் என, தெள்ளத்தெளிவாக இருக்கிறோம். நம்மை ஆண்ட கட்சியும் வேண்டாம்; ஆளுங்கட்சியும் வேண்டாம். மோடி வேண்டும் என்பதிலே, நாம் மிக தெளிவாக இருக்கிறோம். தமிழகத்தில் மகனையும், மருமகனையும் மையப்படுத்தி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மகளிர், இளைஞர், பெண்கள், ஏழைகளுக்கான ஆட்சி நடக்கவில்லை.
தமிழகத்தில், செந்தில் பாலாஜிக்கு அறிமுகமே தேவையில்லை. அவர் லஞ்சம் வாங்கி கைதாகி, புழல் சிறையில், 230 நாட்களாக உள்ளார். அரசு வேலை செய்கிறவர்கள் யாராக இருந்தாலும், 48 மணி நேரம் சிறையில் இருந்தால், அவருடைய பதவியை பறிக்க வேண்டும் என்பது சட்டம். ஆனால், செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி இன்னும் பறிக்கப்படாமல், இலாகா இல்லாத அமைச்சர் என, ஸ்டாலின் வைத்துள்ளார்.
அப்படி என்றால் என்ன அர்த்தம். மாதா மாதம், மக்களது வரிப்பணத்தில், 1.05 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. எட்டு மாதமாக, 8.40 லட்சம் ரூபாய், வேலையே செய்யாமல், புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு, மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் கொடுத்துள்ளனர். உயர் நீதிமன்றமே நியாயமா என்று கேட்டுள்ளது. அதனால் தான், தி.மு.க., அரசை ஊழல் அரசு, ஊழல் செய்வோரை காப்பாற்றுகின்ற அரசு என்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.