ADDED : நவ 27, 2024 02:28 AM
சென்னை:அமலாக்கத்துறை வழக்கு விசாரணையை தள்ளி வைக்கக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அ.தி.மு.க., ஆட்சியின் போது போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தார். அப்போது பணி நியமனம் பெற்று தருவதாக மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் நடவடிக்கை எடுத்தது.
இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை, முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள மோசடி வழக்கு விசாரணை முடியும் வரை அமலாக்கத்துறை வழக்கு விசாரணையை தள்ளி வைக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுத்தாக்கல் செய்தார்.
மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பிலும் வாதங்கள் முடிந்த நிலையில் இந்த மனு தள்ளி வைக்கப்பட்டிருந்தது.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது செந்தில் பாலாஜி தரப்பில் மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.