செந்தில் பாலாஜி தம்பி மனு; ஈ.டி., பதிலளிக்க உத்தரவு
செந்தில் பாலாஜி தம்பி மனு; ஈ.டி., பதிலளிக்க உத்தரவு
ADDED : நவ 26, 2025 12:13 AM

சென்னை: தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட, 'லுக் அவுட்' நோட்டீசை திரும்பப்பெற கோரி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க, அமலாக்கத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் உட்பட 13 பேருக்கு எதிராக, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது. விசாரணைக்கு ஆஜராகாமல், அசோக்குமார் தலைமறைவாக இருந்தார். தேடப்படும் நபர் என அறிவித்து, அவருக்கு எதிராக, 'லுக் அவுட்' நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இதை திரும்பப்பெற கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், அசோக்குமார் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அசோக்குமார் தரப்பில், மூத்த வழக்கறிஞர் பி.வி.பாலசுப்பிரமணியன் ஆஜராகி, “வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகி மனுதாரர் முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதால், 'லுக் அவுட்' நோட்டீசை திரும்ப பெற வேண்டும்,” என்றார்.
இதையடுத்து, 'லுக் அவுட் நோட்டீஸ் இன்னும் நீடிக்க வேண்டுமா' என, கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்கும்படி அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

