அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி மனு: மார்ச் 28 ல் தீர்ப்பு
அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி மனு: மார்ச் 28 ல் தீர்ப்பு
ADDED : மார் 22, 2024 04:58 PM

சென்னை: அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் எனக்கூறி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது வரும் 28 ல் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தனக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் இல்லை என செந்தில்பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது.
இதனை எதிர்த்த அமலாக்கத்துறை தரப்பினர், 2015, 2016 மற்றும் 2017 ம் ஆண்டுகளில் செந்தில்பாலாஜியின் வங்கிக்கணக்கில் அதிகளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டது. அவருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் உள்ளதால், மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட முதன்மை அமர்வு அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, இந்த வழக்கில் வரும் 28 ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார்.
காவல் நீட்டிப்பு
இதனிடையே, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மார்ச் 28 வரை நீட்டிக்கப்பட்டது. புழல் சிறையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக செந்தில் பாலாஜி நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரின் காவல் நீட்டிக்கப்படுவது இது 29 வது முறையாகும்.

