ADDED : ஜன 23, 2024 05:06 AM

சென்னை : சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என, அமைச்சர் செந்தில்பாலாஜி சார்பில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனால், நேற்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை.
சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச்சட்டத்தில், அமைச்சர் செந்தில்பாலாஜியை, கடந்தாண்டு ஜூன் 14ல் அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த வழக்கில், அவருக்கு எதிராக, 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, அதன் நகல்கள், செந்தில்பாலாஜிக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், வழக்கின் அடுத்தகட்டமாக குற்றச்சாட்டுகள் பதிவுக்காக, நேற்று செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த, சிறைத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, நேற்று நீதிபதி எஸ்.அல்லி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில்பாலாஜி சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், செந்தில் பாலாஜிக்கு எதிராக, போக்குவரத்து துறையில் பணி நியமனங்கள் பெற்று தருவதாக, பணம் பெற்று ஏமாற்றியதாக, சென்னை மத்திய குற்றப் பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத்துறை தாக்கல் செய்த இந்த வழக்கின் விசாரணையை துவக்கக்கூடாது.
நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளன. விசாரணை ஒரு சார்பாக நடக்க வாய்ப்புள்ளது. மனுதாரருக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு உரியதாக இருப்பதால், அவரை விடுவிக்க வேண்டும். இந்த மனு மீது முடிவெடுக்கும் வரை, விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என, கோரப்பட்டிருந்தது.
செந்தில்பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜராகி, ''சட்டப்பூர்வ பிரச்னைகள் குறித்து, மனுதாரர் கேள்வி எழுப்பி விசாரணையை தள்ளிவைக்க கோரியுள்ளார்.
''இதுபோன்ற வழக்குகளில், உச்ச நீதிமன்றமும், தெலுங்கானா உயர் நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது. மனுவுக்கு விரிவாக வாதிட உள்ளோம். ஆவணங்களை தங்களுக்கு வழங்கக் கோரி, 2வது முறையாக தாக்கல் செய்த மனுவையும் விசாரிக்க வேண்டும், என்றார்.
அப்போது அமலாக்கத்துறை சார்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி, இந்த மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்றார்.
இதை ஏற்ற நீதிபதி எஸ்.அல்லி, செந்தில்பாலாஜி சார்பில் தாக்கல் செய்த மனுக்களுக்கும் பதிலளிக்கும்படி, அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 29ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
மேலும், செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலையும், வரும் 29ம் தேதி வரை நீட்டித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

