கோயில்களுக்கு தனி வாரியம்; பிராமணர் சங்க மாநாட்டில் தீர்மானம்
கோயில்களுக்கு தனி வாரியம்; பிராமணர் சங்க மாநாட்டில் தீர்மானம்
ADDED : அக் 12, 2025 11:09 PM

ஸ்ரீவில்லிபுத்துார்; தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் என விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் நடந்த தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இம்மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் நாராயணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் முத்துப்பட்டர் முன்னிலை வகித்தார்.
சடகோபராமானுஜர் ஜீயர், பிரமீட் நடராஜன், யுடியூப் நெறியாளர் ரங்கராஜ் பாண்டே, சங்க நிர்வாகிகள் பேசினர்.
தீர்மானங்கள் கேரள அரசு அமைத்துள்ளது போல தமிழகத்திலும் முற்பட்ட சமுதாயங்களில் நலிந்தோர்க்கு உதவிடும் வகையில் தனியாக ஒரு நல வாரியம் அமைத்தல், மத்திய அரசு சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்தி உள்ள பொருளாதார அடிப்படையில் 10 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழகத்திலும் நடைமுறைப்படுத்துதல், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நவோதயா பள்ளிகளை அமைத்தல், அரசு, உதவி பெறும் பள்ளிகளில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழி பாடங்களை விருப்ப பாடமாக கற்றுத் தருதல், தமிழக கோயில்களை நிர்வகிக்க தனி வாரியம் அமைத்தல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.