'டாஸ்மாக்' கடைகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு தனி 'கவுன்டர்'
'டாஸ்மாக்' கடைகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு தனி 'கவுன்டர்'
ADDED : செப் 27, 2024 02:04 AM
சென்னை:தமிழக அரசின் டாஸ்மாக் கடை ஊழியர்கள், மது பாட்டிலுக்கு அரசு நிர்ணயம் செய்திருப்பதை விட, கூடுதல் பணம் வசூலித்து வருகின்றனர்.
இதை தடுக்கவும், 'பாயின்ட் ஆப் சேல்' கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதில், 'டெபிட், கிரெடிட்' கார்டை, 'ஸ்வைப்' செய்தும், 'ஸ்கேன்' செய்தும் பணம் வழங்கலாம். பல கடைகளில், டிஜிட்டல் முறையில் பணம் வாங்க ஊழியர்கள் மறுப்பதாக புகார்கள் எழுகின்றன. எனவே, மது கடைகளில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு தனி கவுன்டர்கள் அமைக்கும்படி கூறப்பட்டுள்ளது.
டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வாடிக்கையாளர்கள் ரொக்கம், டிஜிட்டல் என, தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப, எந்த முறையிலும் பணம் தரலாம். அதை வாங்க மறுக்கக்கூடாது. டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு தனி கவுன்டர்களை ஏற்படுத்துமாறும், மாவட்ட மேலாளர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்' என்றார்.