'பாதயாத்திரை பக்தர்களுக்கு தனிப்பாதை வேண்டும்' ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
'பாதயாத்திரை பக்தர்களுக்கு தனிப்பாதை வேண்டும்' ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
UPDATED : ஜன 15, 2024 07:36 AM
ADDED : ஜன 15, 2024 04:30 AM

திருப்பூர்: 'பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தனிப்பாதை அமைக்க வேண்டும்' என ஹிந்து முன்னணி அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அவ்வமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியிருப்பதாவது:
திருச்செந்துார் பழனி சபரிமலை சமயபுரம் உள்ளிட்ட ஆன்மிகத் தலங்களுக்கு காவடி தீர்த்த குடம் இருமுடி எடுத்து பாதயாத்திரையாக பக்தர்கள் செல்வது வழக்கம். பக்தர்கள் பாதயாத்திரையாக செல்லும்போது பல இடங்களில் விபத்துகள் நிகழ்கின்றன; உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
அசம்பாவிதங்களை தடுக்கும்விதமாக பாதயாத்திரை பக்தர்களுக்கு தனி சாலை வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அப்போதைய அ.தி.மு.க. அரசு திண்டுக்கல்லில் இருந்து பழனி வரை; செம்பட்டியில் இருந்து ஒட்டன்சத்திரம் வரை பாதயாத்திரை பக்தர்கள் பயன்படுத்த தனி ரோடு அமைத்து கொடுத்தது.
தற்போது இந்த ரோடுகள் குண்டும் குழியுமாக புல் செடிகள் முளைத்து விஷ ஜந்துகள் நடமாடும் இடமாக மாறிவிட்டன. இதனால் இதைப் பயன்படுத்துவதை தவிர்த்து கனரக வாகனங்கள் செல்லக்கூடிய ரோட்டில் பக்தர்கள் நடந்து செல்ல வேண்டியுள்ளது.
தாராபுரம் உடுமலை வழியாக வரக்கூடிய பக்தர்களுக்கு தனி ரோடு இல்லை. திருச்செந்துாருக்கு பல ஆண்டுகளாக பக்தர்களுக்கு தனி சாலை அமைக்கும் திட்டம் கிடப்பில் உள்ளது.
மேலும் திருநெல்வேலி முதல் திருச்செந்துார் வரையிலும் துாத்துக்குடி முதல் திருச்செந்துார் வரையிலும் இருக்கும் ரோடுகளும் மோசமான நிலையில் உள்ளன.
பக்தர்களுக்கு தனி ரோடு ஒளிரும் குச்சி கழிப்பிடம் மருத்துவம் குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை வழங்க அறநிலையத்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.