மதுரையில் சர்வர் பிரச்னையால் டி.என்.பி.எஸ்.சி.,தேர்வில் குளறுபடி
மதுரையில் சர்வர் பிரச்னையால் டி.என்.பி.எஸ்.சி.,தேர்வில் குளறுபடி
ADDED : டிச 15, 2024 10:04 AM
மதுரை: டி.என்.பி.எஸ்.சி.,தேர்வில் தொழில்நுட்ப கோளாறால் மதுரை மையத்தில் தேர்வு எழுத அனுமதிப்பதில் ஏற்பட்ட சிக்கலால் விண்ணப்பதாரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கு டி.என்.பி.எஸ்.சி.,சார்பில் நேற்று தேர்வு நடந்தது. இதற்காக மதுரை அருகே அழகர்கோவிலுள்ள ஒரு கல்லுாரியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டது. அங்கு தேர்வு எழுதச் சென்றவர்களின் ஹால்டிக்கெட்டில் இருந்த பதிவு எண்களை கணினியில் அலுவலர்கள் சரிபார்த்தனர். சிலரது எண்கள் மட்டுமே ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது; மற்றவர்களின் எண்கள் இடம்பெறவில்லை எனக்கூறி தேர்வு எழுத அனுமதிக்கவில்லை.
தேர்வில் பங்கேற்கச் சென்ற வழக்கறிஞர் சாகுல் ஹமீது கூறியதாவது:
இது கணினி வழி முறையிலான ஆன்லைன் தேர்வு. தேர்வு நேரம் மதியம் 2:30 மணி முதல் மாலை 5:30 மணிவரை. மையத்திற்குள் மதியம் 1:30 முதல் 2:00 மணிக்குள் இருக்க வேண்டும். இம்மையத்தில் தொழில்நுட்ப கோளாறல் 15 முதல் 30 பேர்வரை மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்களை அனுமதிக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டோம். ஏற்கனவே அனுமதிக்கப்பட்டவர்கள் தேர்வு எழுதத் துவங்கிய சில மணி நேரத்தில் தேர்வை அலுவலர்கள் நிறுத்தி வைத்தனர். அனைவரையும் மாலை 5:30 மணிக்கு மேல் தேர்வு எழுத அனுமதிப்பதாக அலுவலர்கள் கூறினர். நாங்கள் ஏற்கவில்லை. யாரும் தேர்வு எழுதவில்லை என்றார்.
அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தேர்வின் துவக்கத்தில் மாநிலம் முழுவதும் கணினி சர்வரில் தொழில்நுட்ப பிரச்னை இருந்தது. பின் சரி செய்யப்பட்டது. இம்மையத்தில் 222 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது. 70 பேரின் ஹால்டிக்கெட்டிலுள்ள விபரங்களை மட்டுமே இணையத்தில் சரிபார்க்க முடிந்தது. அவர்களை தேர்வு எழுத அனுமதித்தோம். அவர்களை தேர்வு எழுதவிடாமல் மற்றவர்கள் தடுத்தனர். இதனால் தேர்வு பாதித்தது. நடந்த விபரங்களை டி.என்.பி.எஸ்.சி.,நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளோம். அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள மையத்திலும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.