6 மாதமாக கிடப்பில் இருக்கும் 'செட்' தேர்வு முடிவுகள்
6 மாதமாக கிடப்பில் இருக்கும் 'செட்' தேர்வு முடிவுகள்
UPDATED : ஆக 10, 2025 05:06 AM
ADDED : ஆக 09, 2025 11:58 PM

சென்னை:தமிழகத்தில் உயர் கல்வி நிறுவனங்களில் உதவி பேராசிரியராக பணியாற்ற, 'செட்' எனும் மாநில தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அந்த வகையில், 2024ம் ஆண்டுக்கான, 'செட்' தேர்வு அறிவிப்பை கடந்த ஆண்டு மார்ச் மாதம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை வெளியிட்டது; விண்ணப்பங்களும் பெறப்பட்டன.
இந்த சூழலில், 'செட்' தகுதி தேர்வை, டி.ஆர்.பி., எனும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமே நடத்துவதற்கான அரசாணை, கடந்த ஆண்டு டிசம்பரில், உயர் கல்வித் துறை சார்பில் பிறப்பிக்கப்பட்டது. பின், ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், கடந்த மார்ச் 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை, செட் தேர்வு நடந் தது.தேர்வு நடந்து ஆறு மாதங்கள் ஆன நிலையில், அதன் முடிவுகளை வெளியிடுவதில் தொடர்ந்து தாமதம் செய்யப்பட்டு வருகிறது.
உயர் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், 'செட்' தேர்வில், தமிழ்வழி கல்வி முன்னுரிமை கேட்பவர்கள், ஒன்றாம் வகுப்பு முதல் முதுகலை பட்டம் வரை, தமிழ்வழி கல்வி படித்ததற்கான சான்றிதழ்களை சமர்ப்பிக்க, கடந்த 7ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. அந்த ஆவணங்கள், டி.ஆர்.பி., சார்பில் சரிபார்க்கும் பணிகள் நடந்து வருகின்றன.
மேலும், இது தொடர்பாக நீதிமன்ற வழக்குகள் இருப்பதால், தாமதம் ஏற்பட்டது. அதில் தீர்வு காணப்பட்டு வருவதால், இம்மாத இறுதிக்குள், 'செட்' தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். அதன் தொடர்ச்சியாக, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள, 4,000 உதவி பேராசிரியர் நியமனத்துக்கான போட்டித்தேர்வு தேதி அறிவிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.