ஒரு தலைக்கவசம், ஒரு கேமரா... கட்டுமானம் முழுவதும் காட்சியில்!
ஒரு தலைக்கவசம், ஒரு கேமரா... கட்டுமானம் முழுவதும் காட்சியில்!
ADDED : அக் 25, 2026 02:31 PM
– சேதுராமன் சாத்தப்பன் –
புராஜக்ட் மேனேஜர்கள் ஒரே நேரத்தில் பல பெரிய கட்டுமான தளங்களை கண்காணிக்க வேண்டியுள்ளது. இதற்காக புகைப்படங்கள், கையால் எழுதும் அறிக்கைகள், நேரில் சென்று பார்ப்பது என துண்டு துண்டான தகவல்களையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. இதனால் முடிவெடுப்பதில் தாமதம், காலக்கெடு நீடிக்கிறது.
இதற்கு தீர்வாக மும்பையை சேர்ந்த சைட்பேஸ் (SitePace.AI) என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் கட்டுமான பணிகளுக்காக செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) அடிப்படையிலான காட்சி தளத்தை உருவாக்கியுள்ளது. நேரில் அங்கு இல்லாமலேயே தொலைவில் இருந்து தளத்தை படம்பிடிக்க, வரைபடமாக்க, மீண்டும் பார்வையிட இது உதவுகிறது.
கடந்த 2023-ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் 360 டிகிரி கேமரா, கணினி பார்வை, ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. பணியாளர்கள் தலைக்கவசத்தில் 360 டிகிரி கேமராவை பொருத்தி தளத்தில் நடக்கும்போது படம்பிடிக்கலாம். அந்த பதிவுகள் தானாகவே தள வரைபடங்கள் மற்றும் தேதி வாரியாக ஒழுங்கமைக்கப்படுகின்றன. பின்னர் குழுவினர் தொலைவில் இருந்து தளத்தில் உலா வரலாம், தேதிகளுக்கு இடையேயான முன்னேற்றத்தை ஒப்பிடலாம், குறிப்புகளை சேர்க்கலாம், மெய்நிகர் நடைபயணம் வாயிலாக இணைந்து பணியாற்றலாம்.
காட்சி ஆவணப்படுத்தலை தாண்டி தற்போது ஏ.ஐ.,யால் இயங்கும் ‘சிசிடிவி’ கண்காணிப்பு, ட்ரோன் நுண்ணறிவு, தள தகவல்களுடன் பேச உதவும் இன்டெல்லிவிஸ் (IntelliViz) என்ற ஏ.ஐ., சாட்பாட் ஆகியவற்றையும் இந்நிறுவனம் கொண்டு வந்துள்ளது. தானியங்கு முன்னேற்ற கண்காணிப்பு, குறைபாடு கண்டறிதல், பாதுகாப்பு கண்காணிப்புக்கான தொழில்நுட்பத்தையும் உருவாக்கி வருகிறது.
எப்படி செயல்படுகிறது?
ஹெல்மெட்டில் பொருத்திய கேமரா 360 டிகிரி காட்சிகளை படம்பிடித்து ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் தள வரைபடத்துடன் தானாக சீரமைக்கிறது.
பலன்கள் என்ன?
* துல்லிய கண்காணிப்பால் மறுவேலை செலவு 32 சதவீதம் குறைகிறது.
* மெய்நிகர் கண்காணிப்பால் நேரில் செல்லும் தேவை பாதியாக குறைகிறது.
* தொடர் கண்காணிப்பால் விபத்துகள் 25 சதவீதம் குறைகின்றன.
* பொருள் வீணாவது 14 சதவீதம் குறைகிறது, கையால் செய்யும் வேலை 95 சதவீதம் குறைகிறது.
* காட்சி பதிவுகள் இருப்பதால் வழக்கு செலவுகள் 20 சதவீதம் குறைகின்றன.
* ஆய்வு நேரத்தில் 48 சதவீதம் மிச்சம், சிக்கல்களை 50 சதவீதம் வேகமாக கண்டறிய முடிகிறது.
பெரிய பல மாடி கட்டடங்களுக்கு கூட ஒன்று அல்லது இரண்டு கேமராக்கள் போதும்.
சந்தா அடிப்படையிலான சேவையாக (SaaS) இயங்குகிறது. திட்ட தேவைக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. விவரங்களுக்கு: https://sitepace.ai
சந்தேகங்களுக்கு: இ–மெயில்: Sethuraman.sathappan@gmail.com; மொபைல்போன்: 9820451259; இணையதளம்: www.startupandbusinessnews.com
