ஸ்ரீவை., ஸ்டேஷன் மாஸ்டருக்கு சேவா புரஸ்கர் விருது அறிவிப்பு
ஸ்ரீவை., ஸ்டேஷன் மாஸ்டருக்கு சேவா புரஸ்கர் விருது அறிவிப்பு
UPDATED : டிச 19, 2024 01:52 AM
ADDED : டிச 18, 2024 10:49 PM

துாத்துக்குடி:மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் ரயில்வே துறையில் சிறப்பாக பணியாற்றிய, 100 பணியாளர்களை தேர்வு செய்து, 'அதிவிசிஷ்ட் ரயில் சேவா புரஸ்கர்' என்ற விருது வழங்கப்படுகிறது. வரும் 21ம் தேதி டில்லியில் நடக்கும், 69வது ரயில்வே வார விழாவில், இந்த விருதுகளை ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வழங்குகிறார்.
விழாவில், துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் ஜாபர் அலியும் விருது பெறுகிறார். 800 பயணியருடன், திருச்செந்துாரில் இருந்து சென்னை சென்ற செந்துார் எக்ஸ்பிரஸ் ரயிலை, விபத்தில் இருந்து காப்பாற்றியதற்காக இவ்விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது.
கடந்த ஆண்டு டிச., 17 மற்றும் 18ம் தேதிகளில் பெய்த கனமழையால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையமும், அருகே தண்டவாளமும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு, ரயில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
உடனே விரைந்து செயல்பட்டு, உயர் அதிகாரிகளுக்கு தகவலை தெரிவித்த ஸ்டேஷன் மாஸ்டர் ஜாபர் அலி, செந்துார் எக்ஸ்பிரஸ் ரயிலை ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தினார். இதனால், பயங்கர விபத்து தவிர்க்கப்பட்டது. ரயிலில் சிக்கிய 800 பயணியரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
சிறப்பாக செயல்பட்டு, 800 பயணியரின் உயிரை காப்பாற்றியதற்காக, இந்திய ரயில்வே வாரியத்தின், அதி விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கர் விருது, ஸ்ரீவைகுண்டம் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் ஜாபர் அலிக்கு, வரும் 21ம் தேதி வழங்கப்பட உள்ளது.