ADDED : ஜூன் 22, 2025 05:27 AM

கோவை : கோவை அருகே செட்டிபாளையம் பேரூராட்சியில், ஏழடிக்கு ஒரு போர்வெல் போடப்பட்டு, மும்முனை மின்சாரம் பெறுவதற்கு, ஒயரிங் வேலை செய்து மின் கம்பத்தில் பெட்டி அமைத்திருந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இம்முறைகேடு வெட்ட வெளிச்சமானதும், அதை மாவட்ட நிர்வாகம் மூடி மறைக்கப் பார்க்கிறது.
கோவை மாவட்டம், செட்டிபாளையம் பேரூராட்சி இரண்டாவது வார்டில் ஓராட்டு குப்பையில் பூசாரி தோட்டம் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள உத்திரண்டாயர் கோவிலுக்குச் சொந்தமான, 24 ஏக்கர் நிலத்தில், கிரசர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், 5,000 மரக்கன்று நட திட்டமிட்டு, அதற்கான பணி நடந்து வருகிறது. இதற்காக, இரு இடங்களில் போர்வெல் போடப்பட்டன. மின் இணைப்பு இல்லாததால், மரக்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டது.
போலி கட்டமைப்பு
மின் வாரியத்தை ஏமாற்றி, மும்முனை இணைப்பு பெறுவதற்காக, 18ம் தேதி, இந்நிலத்துக்கு அருகே சாலையை ஒட்டி, போர்வெல் போட்டிருப்பது போல் போலியாக ஒரு கட்டமைப்பு ஏற்படுத்தி, 'ஒயரிங்' செய்யப்பட்டு, மின் கம்பத்தில் 'பியூஸ் கேரியர்' பெட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. போர்வெல் போட்டதற்கு அடையாளமாக, குழாயை சுற்றிலும் 'எம் சாண்ட்' கொட்டப்பட்டிருந்தது.
இதில், ஏதோ தவறு நடந்திருப்பதாக தகவல் கசிந்ததால், அப்பகுதிக்கு நேரில் சென்ற, அப்பேரூராட்சி இரண்டாவது வார்டு கவுன்சிலர் (பா.ஜ.,) மதிவாணன், போர்வெல் குழாயை திறந்து பார்த்தார். டேப் வாயிலாக அளவீடு செய்தபோது, போர்வெல் ஆழம் ஏழடியே இருந்ததால், அதிர்ச்சி அடைந்தார்.
போர்வெல் போல் ஜோடனை
அவ்விடத்தின் உச்சியில் மின் ஒயர்கள் செல்வதால், போர்வெல் இயந்திரம் நிறுத்தியிருக்க வாய்ப்பில்லை. குழியை தோண்டி, குழாய் பதித்து, சுற்றிலும் 'எம் சாண்ட்' கொட்டி, போர்வெல் போட்டதுபோல் ஜோடனை செய்திருந்தது தெரியவந்தது.
பொக்லைன் இயந்திரம் வாயிலாக குழி தோண்டி, குழாய் பதித்ததாக, அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறினர். இவற்றை வீடியோ எடுத்த கவுன்சிலர், சமூக வலைதளத்தில் பதிவேற்றினார். கோவை மாவட்ட நிர்வாகத்துக்கு நெருக்கடி ஏற்பட்டதும், பேரூராட்சி அலுவலர்கள், அவ்விடத்துக்குச் சென்று, குழாயை அப்புறப்படுத்தி, குழிக்குள் மண்ணை கொட்டி, மூடியுள்ளனர். மின் கம்பத்தில் பொருத்தியிருந்த பெட்டியையும் அகற்றினர்.
பேரூராட்சி விளக்கம்
இச்சூழலில், என்ன நடந்தது என பேரூராட்சி சார்பில், மாவட்ட நிர்வாகம் தரப்பில் விளக்க அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இவ்விவகாரத்தில், போர்வெல் போட்டது போல் போலியாக தோற்றம் ஏற்படுத்தியதே தவறு. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் கடமை.
தவறு செய்தவர்கள் மீது தயவு தாட்சண்யம் காட்டாமல், துறை ரீதியான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், இம்முறைகேட்டுக்கு மாவட்ட நிர்வாகமும் உடந்தையாக இருப்பதுபோல், மூடி மறைக்க முயற்சித்திருப்பது, விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
கள்ளக்கணக்கு எத்தனையோ!
மாவட்டம் முழுவதும் இதுபோல், எத்தனை இடங்களில் போர்வெல் போட்டதாக கணக்கெழுதி, பணம் சுருட்டப்பட்டதோ என்கிற சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இவ்விஷயத்தில், தங்களுக்குள் சமரசம் ஏற்படுத்திக் கொள்ளாமல், உயரதிகாரிகள் கள ஆய்வு செய்து, உண்மையை கண்டறிந்து, துறை ரீதியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மாவட்ட நிர்வாகம் நேர்மையாக செயல்படுகிறது என்பதாக இருக்கும். இல்லையெனில், இம்முறைகேட்டுக்கு மாவட்ட நிர்வாகமும் உடந்தை என்றுதான் மக்கள் நினைப்பார்கள்.