சர்வதேச சைபர் குற்றவாளிகளுடன் கூட்டு இரு பெண்கள் உட்பட ஏழு பேர் கைது
சர்வதேச சைபர் குற்றவாளிகளுடன் கூட்டு இரு பெண்கள் உட்பட ஏழு பேர் கைது
ADDED : ஏப் 05, 2025 04:46 AM

சென்னை : மலேஷியாவில் இருந்து, 'ஆன்லைன்' வாயிலாக, ஓய்வு பெற்ற மத்திய, மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரை, சர்வதேச சைபர் குற்றவாளிகள், 'டிஜிட்டல்' கைது செய்து, பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு, தமிழகத்தை சேர்ந்த நபர்கள், ஏஜென்ட்களாக செயல்பட்டு, வங்கி கணக்குகளை வாடகைக்கு விட்டு, கமிஷன் பெறுவதாக, மாநில சைபர் குற்றப்பிரிவு தலைமையகத்தின் கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டலுக்கு தகவல் கிடைத்தது.
அவர்களை பிடிக்க, தனிப்படைகள் அமைக்கப்பட்டு, ஏஜென்ட்களை போலீசார் தேடி வந்தனர். மார்ச், 31ல், சென்னையை சேர்ந்த பைசுனிஷா,48 என்ற பெண்ணை பிடித்து விசாரித்தனர். அப்போது, சர்வதேச சைபர் குற்றவாளிகளுக்கு, உதவி செய்வதற்காக சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த பாய்ஸ்கான்,58, ஆட்களை வேலைக்கு எடுக்கும் தலைவராக செயல்பட்டு வருவது தெரிய வந்தது. இதையடுத்து, பாய்ஸ்கானை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
விசாரணையின் போது, அவர் பல தகவல்களை தெரிவித்தார். மதுரையை சேர்ந்த சேதுராமன், 29, வங்கியில் வேலை செய்கிறார். அவர் எங்களுடன் கூட்டுச் சேர்ந்து, போலி ஆவணங்கள் வாயிலாக, வங்கி கணக்குகள் துவங்க உதவி செய்தார். அவருக்கு கமிஷன் தொகையாக, பல ஆயிரம் ரூபாய் தரப்படும். இவர் தவிர, விழுப்புரத்தை சேர்ந்த செல்லத்துரை, 40; தேவி, 39, சென்னை நந்தனம் பகுதியை சேர்ந்த தமீம் அன்சாரி, 34, சென்னை தாம்பரம் பாசில் அஹமத்,41, ஆகியோரும் உதவி செய்துள்ளனர்.
இவர்கள் கூலி வேலை செய்யும் பெண்கள் உள்ளிட்டோரை மூளைச்சலவை செய்து, அவர்கள் பெயரில் வங்கி கணக்குகள் துவக்கி, சர்வதேச சைபர் குற்றவாளிகளுக்கு வாடகைக்கு விடுவர் என்று தெரிவித்தார். இதையடுத்து அவர்களையும், போலீசார் கைது செய்தனர். ஏழு பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சர்வதேச சைபர் குற்றவாளிகளுடன் கூட்டு சேர்ந்து செயல்பட்டதால், இவர்கள் மீது இந்தியா முழுதும், 150க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும், விசாரணையில் தெரிய வந்துள்ளது.