பாலியல் வன்கொடுமை வழக்கு: சீமான் கோரிக்கை ஐகோர்ட்டில் தள்ளுபடி!
பாலியல் வன்கொடுமை வழக்கு: சீமான் கோரிக்கை ஐகோர்ட்டில் தள்ளுபடி!
ADDED : பிப் 17, 2025 05:26 PM

சென்னை: பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற சீமான் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்திருந்தார். தன்னை திருமணம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்தார் என்பது புகாரின் சாராம்சம்.
கடந்த 2011ல் அளிக்கப்பட்ட இந்த புகாரை ரத்து செய்யக்கோரி சீமான் மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த 2011ம் ஆண்டு அளித்த புகாரை 2012ம் ஆண்டிலேயே திரும்பப் பெற்றுக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கடிதம் அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில் போலீசார் வழக்கை ஏற்கனவே முடித்து வைத்த நிலையில், மீண்டும் விஜயலட்சுமி தரப்பில் வழக்கை விசாரிக்கக்கோரி புகார் அளிக்கப்பட்டது. வழக்கு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது,
சீமான் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்தியன் ஆஜராகி, 'ஏற்கனவே 2011ம் ஆண்டு வழங்கிய புகாரை திரும்ப பெற்றுக் கொண்டார். பின்னர் 2023ல் கொடுக்கப்பட்ட புகாரையும் திரும்ப பெற்றுக் கொண்டார். தற்போது தூண்டுதலின் பேரில்தான் இந்த புகார் கொடுக்கப்பட்டதால் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அதற்கு போலீஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகிலன் இது இந்திய தண்டனை சட்டம் 376 பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்கு என தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, 'எதற்காக வழக்கை திரும்ப பெற்றார்? வழக்கை திரும்ப பெறுவதாக புகார்தாரர் கூறினாலும் காவல்துறை பாலியல் வன்கொடுமையை விசாரிக்க அதிகாரம் உள்ளது' என்று தெரிவித்தார். 'சர்வ சாதாரணமாக இந்த வழக்கை முடித்து விட முடியாது' எனக்கூறிய நீதிபதி, விஜயலட்சுமி வழக்கை தள்ளுபடி செய்யக் கூறி கொடுக்கப்பட்ட சீமான் வழக்கை தள்ளுபடி செய்தார்.
மேலும் வழக்கு விசாரணையை 3 மாதங்களுக்குள் விசாரித்து முடித்து வைக்க வளசரவாக்கம் போலீசுக்கு உத்தரவிட்டார்.