மதுரை காமராஜ் பல்கலையில் பாலியல் புகார்கள்: 'பேசி முடிப்பதாக' பேராசிரியர்கள் மீது குற்றச்சாட்டு
மதுரை காமராஜ் பல்கலையில் பாலியல் புகார்கள்: 'பேசி முடிப்பதாக' பேராசிரியர்கள் மீது குற்றச்சாட்டு
ADDED : மார் 18, 2025 06:50 AM

மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் பாலியல் ரீதியான புகார்கள் அதிகரித்துள்ளன. இது போன்ற புகார் எழுந்தவுடனேயே அதை பேராசிரியர்கள் சிலர் 'பேசி முடிக்கிறேன்' என்ற பெயரில் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இப்பல்கலையில் பல மாதங்களாக துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளது. பதிவாளர் முதல் தொலைநிலைக் கல்வி இயக்குநர் வரை உள்ள முக்கிய உயர் பதவிகளில் துறை பேராசிரியர்கள் 'கூடுதல் பொறுப்பு' வகிக்கின்றனர். இவர்களில் அனுபவம் இல்லாத சில 'ஜூனியர்' பேராசிரியர்களால் தொலைநிலைக் கல்வி உள்ளிட்ட பிரிவுகளில் இருந்து கிடைக்கும் வருவாய் வெகுவாக குறைந்தது.
ஒருபுறம் வருவாய் பாதிப்பு, நிர்வாக குளறுபடி. மறுபுறம் மாநில அரசின் நிதி கிடைக்காதது போன்ற காரணங்களால் மூன்று மாதங்களாக பேராசிரியர்கள், அலுவலர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இதற்கிடையே மாணவிகள், பெண் அலுவலர்களுக்கு பாலியல் ரீதியிலான தொந்தரவுகளும் ஓராண்டாக அதிகரிக்க துவங்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் துணைவேந்தர் இல்லாதது; பொறுப்பு வகிக்கும் கன்வீனர் கமிட்டியின் ஏனோ தானோ செயல்பாடு, போதிய கண்காணிப்பு இல்லாததே என்கின்றனர், சீனியர் பேராசிரியர்கள்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: சில நாட்களுக்கு முன் தொலைநிலைக் கல்வியில் எம்.பி.ஏ., மாணவியை பேராசிரியர் ஒருவர் புராஜெக்ட் சமர்ப்பிப்பது தொடர்பாக லாட்ஜ் ஒன்றுக்கு வந்து ஆலோசிக்குமாறு அழைத்துள்ளார். இதில் அதிர்ச்சியான மாணவி பல்கலை. முக்கிய அதிகாரியிடம் புகார் அளித்தார். நடவடிக்கை இல்லை. இதையடுத்து அவரது பெற்றோர் கவனத்திற்கு கொண்டு சென்றார். அதன் பின் தொலைநிலைக் கல்வி உயர் அதிகாரி தலைமையில் பேச்சு நடத்தி அப்பிரச்னை வெளியே வராமல் மூடி மறைக்கப்பட்டது.
கணிதத் துறை ஆராய்ச்சி மாணவி கட்டணம் செலுத்தியது தொடர்பாக துறை பேராசிரியர் ஒருவரிடம் கையெழுத்து பெற அவரது அலுவலகத்திற்கு சென்றார். தனிமை சூழலை பயன்படுத்தி அந்த மாணவிக்கு வாழ்த்து கூறுவது போல் தோள்களை பிடித்து கன்னத்தை தடவி பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அதிர்ச்சியடைந்த மாணவி சிண்டிகேட் உறுப்பினர் மூலம் பதிவாளரிடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக பல்கலை ஐ.சி.சி., குழு விசாரித்தது. ஆனால் தவறு செய்த பேராசிரியரை இதுவரை தண்டிக்கவில்லை.
இது போல் முன்னாள் தேர்வாணையர் ஒருவர் மீது பெண் அலுவலர் பாலியல் புகார் அளித்தார். கணிதத் துறை ஆராய்ச்சி மாணவிகள் இருவருக்கு, ஒரு பேராசிரியர் பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் அந்த மாணவிகள் பாதியிலேயே படிப்பை நிறுத்தி சென்று விட்டனர். இதிலும் சிலர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். இதுபோன்ற சம்பவங்களால் மாணவிகள் அச்சத்தில் உள்ளனர். சில புகார்கள் போலீசில் தெரிவிக்கப்பட்டாலும் அங்கும் 'பேசி முடிக்கும்' பணியை பேராசிரியர்கள் சிலர் கச்சிதமாய் செய்கின்றனர்.
பெரும்பாலான புகார்கள் ஐ.சி.சி.,க்கு செல்லாமல் துறை அளவிலேயே பேசி முடிக்கப்படுவதாக மாணவிகள் குற்றம் சாட்டுகின்றனர். கடைசியாக, தொலை நிலைக் கல்வியில் நடந்தது உட்பட சில சம்பவங்கள் குறித்து ஆதாரங்களுடன் உயர்கல்வி செயலாளர், முதல்வர் தனிப் பிரிவுக்கு பாதிக்கப்பட்ட மாணவிகள் சார்பில் புகார்கள் அனுப்பப்பட்டுள்ளது என்றனர்.