ரூ.1 கோடி ஊழலால் அவமானம்; மேயரை வறுத்தெடுத்த கவுன்சிலர்கள்
ரூ.1 கோடி ஊழலால் அவமானம்; மேயரை வறுத்தெடுத்த கவுன்சிலர்கள்
ADDED : மார் 29, 2025 05:46 AM

தஞ்சாவூர்: 'தஞ்சாவூர் மாநகராட்சிக்கே உங்களால் தான் அவமானம்' என, மேயருக்கு எதிராக, ஆளும்கட்சி கவுன்சிலர்கள் கொதித்தனர்.
தஞ்சாவூர் மாநகராட்சியில், தி.மு.க.,வை சேர்ந்த மேயர் ராமநாதன் தலைமையில் நேற்று கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. இதில், தி.மு.க., கவுன்சிலர்கள் ஆனந்த், நீலகண்டன் உள்ளிட்டோர் பேசியதாவது:
கமிஷனரிடம் ஏதாவது கோரிக்கை வைத்தால், மேலிடத்தில் கூறி கட்சியில் இருந்து நீக்கி விடுவேன் என மிரட்டுகிறார். கருணாநிதி பெயரில் மாநாடு நடத்த அரங்கம் கட்டப்பட்டது. ஆனால், தனியார் தியேட்டர் அமைக்க அனுமதி கொடுத்தது யார்?
அதில், கட்டத்தை இடிப்பதற்கு எப்படி அனுமதி அளித்தீர்கள்? இந்த விவகாரத்தில், கமிஷனர், மேயர் 1 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியுள்ளனர்.மாநாடு கட்டடத்தின் உள்பகுதியில் இடிக்க அனுமதி அளித்து விட்டு, முறையான ஆதாரங்களை கொடுக்காமல், நீதிமன்றத்திற்கு வழக்கிற்கு சென்றுள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய கூறினால், 'நீங்கள் செய்து கொள்ளுங்கள்' என கூறுவது முறையா?
மேயர் மீதான நிலம் வாங்கிய குற்றச்சாட்டிற்கு நாங்கள் கேள்வி எழுப்பிய பின்னரே பதில் அளித்துள்ளீர்கள். இதற்கு முன் இருந்த தலைவர்களால் மாநகராட்சிக்கு பெருமை ஏற்பட்டது. தற்போது உங்களின் ஊழலால் அவப்பெயர் ஏற்படுகிறது. மேயர், கமிஷனரால் மாநகராட்சியின் நற்பெயர் சீர்குலைந்துள்ளது. இவ்வாறு அவர்கள் பேசினர்.
ஆளும்கட்சி கவுன்சிலர்கள் இப்படி மேயர், கமிஷனரை வறுத்தெடுத்து பேசியதற்கு, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் மேஜைகளை தட்டி கோஷம் எழுப்பி பாராட்டு தெரிவித்தனர்.
மேயர் ராமநாதன் கூறுகையில், ''அரங்கத்தால் மாநகராட்சிக்கு 25 லட்சம் ரூபாய் வருமானம் வருகிறது. இதை வேண்டாம் என்கின்றனர். ஊழல் செய்திருந்தால் நீதிமன்றத்திற்கு நாங்கள் எப்படி செல்ல முடியும்? காழ்ப்புணர்ச்சியில் பேசுகின்றனர்,'' என்றார்.