ADDED : அக் 13, 2025 01:51 AM
அரசை விட குறைந்த விலையில், வியாபாரிகள் நெல் கொள்முதல் செய்வது, விவசாயிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நெல் உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், நேரடி நெல் கொள்முதல் தாமதமாகி வருகிறது. வடகிழக்கு பருவமழை துவங்கினால், அறுவடை செய்த நெல்லை பாதுகாப்பது கடினம். இதனால், தனியார் அரிசி ஆலைகள், வியாபாரிகள், கமிஷன் ஏஜன்டுகள் உள்ளிட்டோரிடம், நெல் மூட்டைகளை விற்கும் முயற்சிகளில் விவசாயிகள் இறங்கி உள்ளனர்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், 100 கிலோ சாதாரண ரக நெல் மூட்டை 2,450 ரூபாய்க்கும், சன்னரக நெல் மூட்டை 2,500 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், வியாபாரிகள் மூட்டைக்கு, 200 முதல் 300 ரூபாய் வரை விலை குறைத்து வாங்குகின்றனர்.
இதனால், நெல் மூட்டைகளை நஷ்டத்திற்கு விற்கும் நிலைக்கு, பல விவசாயிகள் தள்ளப்பட்டு உள்ளனர். நெல்லை நீண்ட நாட்கள் பாதுகாக்க வசதி இல்லாததாலும், சம்பா சாகுபடிக்கு பணம் தேவைப்படுவதாலும், குறைந்த விலையில் விற்கும் நிலைக்கும் பலர் ஆளாகியுள்ளனர்.