அரசு தேர்வை நம்பி ஏமாந்தவர்கள் ஒரு லட்சம் பேர்; அமலாக்கத்துறை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்
அரசு தேர்வை நம்பி ஏமாந்தவர்கள் ஒரு லட்சம் பேர்; அமலாக்கத்துறை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்
UPDATED : அக் 29, 2025 02:51 PM
ADDED : அக் 29, 2025 01:52 PM

நமது நிருபர்
நகராட்சி நிர்வாகத்துறையில் நடந்த பணி நியமன மோசடி தொடர்பாக, அமலாக்கத்துறை அனுப்பியுள்ள கடிதம், பல்வேறு விவரங்களை வெட்ட வெளிச்சம் ஆக்கியுள்ளது. லஞ்சமாக பெற்ற பணத்தை, ஹவாலா முறையில் பரிவர்த்தனை செய்துள்ளனர் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கடந்தாண்டில் உதவி பொறியாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், நகரமைப்பு ஆய்வாளர்கள், இளநிலை பொறியாளர்கள் என 2538 காலியிடங்களை அறிவித்தது. இதற்கான தேர்வில் 1.12 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு, பணி நியமனங்களும் செய்யப்பட்டு விட்டன.
இந்நிலையில், இந்த பணி நியமனத்தில் பெரும் ஊழல் நடந்திருப்பதை அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளது. இது தொடர்பாக தமிழக போலீஸ் டிஜிபிக்கு அமலாக்கத்துறை அனுப்பிய கடிதம் விவரம்; * 1. சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் வரக்கூடிய பல வழக்குகளை அமலாக்கத்துறை விசாரிக்கிறது.
* 2.அவ்வாறு சென்னை சிபிஐயின் ஊழல் ஒழிப்பு பிரிவு பதிந்த வழக்கை விசாரித்து ஏப்ரல் 2025ல் சென்னை , திருச்சி, கோவையில் பல வளாகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதில், குற்றம் நடந்தமைக்கான ஆவணங்கள், டிஜிட்டல் கருவிகள், ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன.
(அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் தொடர்புடைய ட்ரூ வேல்யூ ஹோம் நிறுவனம், வங்கியில் மோசடி செய்தது தொடர்பான வழக்கில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதைத்தான் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது)
3.பறிமுதலான ஆவணங்களை ஆய்வு செய்தபோது, குற்றம் தொடர்பான பல ஆதாரங்கள் சிக்கின. அது மட்டுமின்றி, வேறு குற்றச் செயல்பாடுகள் தொடர்பான ஆதாரங்களும் கண்டறியப்பட்டன.
அவற்றில் ஒன்று தான், 2024- 25 மற்றும் 2025- 26ம் ஆண்டில் நடந்த நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையின் பணி நியமனம் தொடர்பான முறைகேடு. 2500 பேருக்கு பணி நியமன ஆணைகளை தமிழக முதல்வர் 2025 ஆக.,5ம் தேதி வழங்கினார்.
4.அமலாக்கத்துறை சோதனை நடத்திய பழைய வழக்கானது முடித்து வைக்கப்பட்டாலும், சோதனைகளின்போது கண்டறியப்பட்ட குற்றச்செயல்பாடு குறித்த ஆவணங்கள், டிஜிட்டல் கருவிகள், தொடர்புடைய வழக்குகளுக்கு மாற்றப்பட்டன.
5.சோதனையில் சிக்கிய போட்டோக்கள், வாட்ஸ்அப் உரையாடல்கள், ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஒவ்வொரு ஆதாரமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்று தெரியவந்துள்ளது. கண்டறியப்பட்டவை அதிர்ச்சி அளிப்பதாக இருந்தன. இதன் மூலம், நகராட்சி நிர்வாகத்துறையில் நடந்த பணி நியமனத்தில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பது வெட்ட வெளிச்சம் ஆனது. தேர்வு நடைமுறையை மோசடியாக செய்து, ஒவ்வொரு பணி நியமனத்துக்கும் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் பெற்றிருப்பது தெரியவந்தது.
6.இது தொடர்பான அனைத்து ஆதாரங்கள் அடங்கிய 232 பக்க அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், 150 தேர்வர்கள் தொடர்பான விவரங்கள் உள்ளன. இந்த ஆதாரங்கள், தேர்வு முடிவுகளுடன் ஒத்துப் போகின்றன.
7. இந்த ஆதாரங்கள் வெளிப்படுத்தும் விவரம்:அ.நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நடத்திய பணி நியமனத்தேர்வு முறைகேட்டில் அரசு ஊழியர்கள் சிலர், அரசியல்வாதிகள், அவர்களது நெருங்கிய உதவியாளர்கள், தனி நபர்கள், தேர்வர்களுக்கு (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) தொடர்பு உள்ளது.
ஆ.மேற்கண்ட நபர்கள், பணி நியமன தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே, தேர்வு குறித்த ரகசிய தகவல்களை அறிந்துள்ளனர்.
இ.மேற்கண்ட நபர்கள், பணி நியமன தேர்வில் வெற்றி பெற வைப்பதற்காக, தேர்வர்களிடம் இருந்து லஞ்சம் பெற்றுள்ளனர்.
ஈ.லஞ்சப்பணம், ரொக்கமாக பெறப்பட்டு, ஹவாலா முறையில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.உ.தேர்வு நடைமுறையில் தொடர்புடைய அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு தெரிந்தே லஞ்சம் பெறப்பட்டுள்ளது.
ஊ.தேர்வு நடைமுறையில் மோசடி செய்து, லஞ்சம் கொடுத்த தேர்வர்கள், தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
எ.லஞ்சமாக பெறப்பட்ட பணம், தனி நபர்களின் பயன்பாட்டுக்காக வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளது.
8.லஞ்சம் கொடுத்ததன் மூலம் பல தேர்வர்கள், தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம், தேர்வு நேர்மையாக நடக்கும் என்று நம்பியிருந்த பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். பல ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட்ட வேலைவாய்ப்புத் தேர்வில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை, தகுதியுள்ள தேர்வர்கள் பலர் இழந்துள்ளனர். இணைக்கப்பட்டுள்ள பட்டியல் மூலம், ஊழல், மோசடி, சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளது உறுதியாகிறது.
9.நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் மாபெரும் ஊழல் நடப்பதன் அடையாளமாாக இணைக்கப்பட்டுள்ள இந்த ஆதாரங்கள் உள்ளன. இந்த ஆதாரங்கள் அனைத்தும், வேறு ஒரு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை நடத்திய சோதனையின்போது தற்செயலாக கிடைத்தவை.
ஒரு மாபெரும் மோசடியில் தொடர்புடைய ஒரு சிலரே இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அனைவரையும் கண்டறிய முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
10.இந்த மோசடி தொடர்பான வழக்கை மாநில அரசின் போலீஸ் துறை பதிவு செய்தால் மட்டுமே அமலாக்கத்துறை விசாரணை நடத்த முடியும். எனவே, அதற்கான ஆதாரங்கள் அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளன.
11.முதலில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.,) பதியப்பட வேண்டும். சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு விசாரணை நடத்துவதற்காக, அதன் நகல் அமலாக்கத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

