புகையிலை பொருள் விற்கும் கடைகளுக்கு நிரந்தரமாக 'சீல்'
புகையிலை பொருள் விற்கும் கடைகளுக்கு நிரந்தரமாக 'சீல்'
ADDED : ஜன 04, 2024 07:06 AM

சென்னை: ''தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு நிரந்தரமாக சீல் வைக்கப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ககன்தீப் சிங் பேடி எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மருத்துவ முறைகளுக்கு பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மாத்திரைகள், போதை மாத்திரையாக பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் மாத்திரைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மக்கள் நல்வாழ்வு துறை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது: புகையிலை, போதை பாக்கு, பான் மசாலா உள்ளிட்ட, 391 வகையான புகையிலை சார்ந்த பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிச., 11ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடத்தப்பட்ட ஆய்வில், 993 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த வகையில், 37.70 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், போலீசார் நடத்திய ஆய்வில், 1,400 கடைகளுக்கு சீல் வைத்துள்ளனர்.
இதற்கு முன், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால், முதன்முறை 5,000 ரூபாய்; இரண்டாவது முறை 10,000 ரூபாய்; மூன்றாவது முறை 25,000 ரூபாய் மற்றும் கடைக்கு சீல் வைக்கும் நடைமுறை எடுக்கப்பட்டது.
தற்போது முதல்முறையிலேயே கடைகளுக்கு, தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ சீல் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், டாக்டரின் பரிந்துரை இல்லாமல் மருந்து விற்றால், மருந்தகங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.