திருமாவுடன் பழக ஆதவ் அர்ஜூனாவிடம் அனுமதி கேட்கணுமா: எ.வ.வேலு கேள்வி
திருமாவுடன் பழக ஆதவ் அர்ஜூனாவிடம் அனுமதி கேட்கணுமா: எ.வ.வேலு கேள்வி
ADDED : டிச 16, 2024 12:18 PM

மதுரை: ''திருமாவளவனுடன் பழகுவதற்கு ஆதவ் அர்ஜூனாவிடம் அனுமதியா கேட்க முடியும்,'' என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
'கூட்டணி கட்சிகள் தொடர்ந்து அழுத்தங்கள் கொடுத்ததால், வி.சி.க., தலைவர் திருமாவளவன் ஜனநாயக ரீதியில் செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். அதனால் மேடையில் அவ்வாறு பேசினேன்' என்று வி.சி.க.,வில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா குற்றம் சாட்டியிருந்தார். அமைச்சர் வேலு, திருமாவளவனிடம் பேசி அழுத்தம் கொடுத்தார் என்றும் கூறியிருந்தார்.
இது குறித்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: தி.மு.க., அழுத்தம் கொடுக்கவில்லை. என்ன ஆதாரம் இருக்கிறது? 2001ல் மங்களூர் தொகுதியில் வெற்றி பெற்று சட்டசபைக்கு வரும் போது, அவருடைய பக்கத்து சீட்டு தான்.அப்போது முதல் தற்போது வரை நானும், அவரும் நல்ல நண்பர்கள். எதிர்க்கட்சி கூட்டணிக்கு போன போதும் கூட திருமாவளவன் என்னுடன் சகஜமாக பேசும் நல்ல சகோதரர், நட்புக்குரியவர். அதனால், என்னிடம் வந்து அவர் பேசும் போது நான் அழுத்தம் கொடுக்கவில்லை. அந்த அவசியமும் கிடையாது.
திருமாவளவன் ஒரு நல்ல அறிவாளி, தொலைநோக்கு பார்வை கொண்டவர். அரசியலைப் பற்றி புரிதல் கொண்டவர். ஒரு கட்சியின் தலைவரான அவர் சுயமாக முடிவெடுக்கக் கூடியவர். எந்த அழுத்தமும் நாங்கள் கொடுக்கவில்லை. திருமாவிடம் பழகுவதற்கு ஆதவ் அர்ஜூனாவிடம் அனுமதியா கேட்க முடியும்?இவ்வாறு அவர் கூறினார்.