ADDED : டிச 29, 2025 10:03 PM

சென்னை: பொதுமக்களின் வரி பணத்தில் போடப்பட்ட சாலைகள், மக்கள் போக்குவரத்துக்காகவா அல்லது திமுக கொடி வைக்கவா? என தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகம் முழுவதும் சேதமடைந்து, குண்டும் குழியுமாக அவலநிலையில் உள்ள சாலைகளை சரி செய்ய வக்கற்ற திமுக அரசு, நல்ல நிலையில் இருக்கும் சாலைகளை தங்கள் கட்சிக் கொடிகளை நடுவதற்காக தோண்டி சேதப்படுத்துகிறது. பொதுமக்களின் வரி பணத்தில் போடப்பட்ட சாலைகள், மக்கள் போக்குவரத்துக்காகவா அல்லது திமுக கொடி வைக்கவா?
சென்னையில், அண்ணா சாலையில் இளைஞர் முகமது யூனுஸ், தாம்பரம்-மதுரவாயல் பைபாசில் ஷோபனா என்ற இளம்பெண், திருமங்கலத்தில், ஹேமமாலினி என்ற இளம்பெண் ஆகியோர் உயிரிழந்தது வெறும் சாலை விபத்துகளால் அல்ல. திமுக அரசின் அலட்சியத்தாலும், பொறுப்பற்ற தன்மையாலும் குண்டும், குழியுமாக இருந்த சாலைகளால்தான். தொடர்ச்சியாக அப்பாவி பொதுமக்கள் உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கிறது திமுக.
சாலைகள் திமுகவின் சொத்து அல்ல. உடனடியாக இந்த அதிகார துஷ்பிரயோகத்தை திமுக நிறுத்திக் கொள்ள வேண்டும். சேதப்படுத்திய சாலைகளை திமுக தனது செலவில் சீரமைக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.

