சட்டம் ஒழுங்கை காக்க முடியாவிட்டால் பதவி விலக வேண்டும்: தி.மு.க.,வுக்கு அன்புமணி வலியுறுத்தல்
சட்டம் ஒழுங்கை காக்க முடியாவிட்டால் பதவி விலக வேண்டும்: தி.மு.க.,வுக்கு அன்புமணி வலியுறுத்தல்
ADDED : ஜூலை 29, 2024 11:44 AM

சென்னை: 'சட்டம் ஒழுங்கை காக்க முடியாவிட்டால் தி.மு.க., அரசு பதவி விலக வேண்டும்' என பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில், அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஒரே நாளில் 3 அரசியல் படுகொலைகள் நடந்துள்ளன. சட்டம் ஒழுங்கை காக்க முடியாவிட்டால் தி.மு.க., அரசு பதவி விலக வேண்டும். படுகொலை செய்யப்பட்டவர்கள் அனைவருமே முன்விரோதம் காரணமாகத் தான் படுகொலை செய்யப்பட்டார்கள் என்று கூறி போலீசார் கடமையை தட்டிக்கழிக்கக் கூடாது.
கொல்லப்பட்ட மூவருக்குமே முன்விரோதம் இருந்திருக்கிறது என்பது உண்மை தான். அரசியலில் இருக்கும் ஒருவருக்கு எவருடனாவது முன்விரோதம் இருந்தால், அவரது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று தான் பொருள் ஆகும். அதனால், அவர்களுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஆய்வு செய்து, அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய போலீசார் தவறி விட்டனர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தலையாயக் கடமை சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது தான். ஆனால், எந்த அச்சமும் இல்லாமல் குற்றவாளிகள் நடமாடுகின்றனர். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்று ஆணையிட வேண்டும். அதை செய்ய முடியா விட்டால், தமிழகத்தில் கடந்த இரு மாதங்களில் நடந்த அரசியல் படுகொலைகளுக்கு பொறுப்பேற்று தமிழக அரசு பதவி விலக வேண்டும். இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.