அசிங்கப்பட்டு கூட்டணியில் நீடிக்க வேண்டுமா? கம்யூ., விசி.,கட்சிகளுக்கு இபிஎஸ் கேள்வி
அசிங்கப்பட்டு கூட்டணியில் நீடிக்க வேண்டுமா? கம்யூ., விசி.,கட்சிகளுக்கு இபிஎஸ் கேள்வி
ADDED : ஜூலை 16, 2025 09:46 PM

சிதம்பரம்: '' தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கே முதல்வர் ஸ்டாலின் வேட்டு வைக்கிறார். அசிங்கப்பட்டு தி.மு.க., கூட்டணியில் அக்கட்சிகள் நீடிக்க வேண்டுமா'' என அ.தி.மு.க., பொதுச்செயலர் இபிஎஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடந்த ' மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் ' கூட்டத்தில் இபிஎஸ் பேசியதாவது:
பயம் ஏன்
ஆட்சியில் இல்லாத போது தி.மு.க., நாடகமாடுகிறது. நாடகம் போடும் கட்சி அ.தி.மு.க., அல்ல. நான் பா.ஜ.,வை கண்டு பயப்படுவதாக ஸ்டாலின் சொல்கிறார். 2031 வரை பா.ஜ., உடன் கூட்டணி இல்லை என சொல்லிவிட்டு திடீரென கூட்டணி வைத்துவிட்டீர்களே என கேட்டார்.
அ.தி.மு.க., எங்கள் கட்சி. யாருடனும் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள். ஏன் நடுங்குகிறீர்கள். முதல்வர், தி.மு.க, தலைவர் பதவியில் இருந்து எதிர்க்கட்சி தலைவரை பார்த்து கேட்க வேண்டிய கேள்வியா? அ.தி.மு.க.,வை கண்டு அவருக்கு பயம் வந்துவிட்டது. இல்லை என்றால் இந்த கேள்வியை கேட்பாரா? அ.தி.மு.க., தலைமையில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமையும்.
என்ன நியாயம்?
மத்தியில் 16 ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்தில் தி.மு.க., இருந்தது. அப்போது தமிழகத்தை பற்றி நியாபகம் வரவில்லை. மக்களை பற்றி கவலையில்லை. ஓட்டுப்போட்ட மக்களை பற்றி கவலையில்லாத முதல்வர், இன்று மத்திய அரசு நிதி தரவில்லை என சொல்கிறார். மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது நிதி கேட்டு பெறவில்லை. திட்டங்களை பெறவில்லை. அப்போது ஆட்சி அதிகாரம் தி.மு.க.,வுக்கு தேவைப்பட்டது. மக்களை பற்றி கவலையில்லை. ஆட்சி அதிகாரத்தில் இருந்துவிட்டு இன்று தினமும் பா.ஜ.,வை பேசும் பொருளாக்குவது என்ன நியாயம்? அப்போது நிதி பெற்று இருந்தால் தமிழகம் வளர்ச்சி பெற்று இருக்கும். ஆனால், மக்களை பற்றி கவலைப்படாத கட்சி தி.மு.க., கருணாநிதி குடும்பம் .இப்போது சட்டசபைக்கு தேர்தல் வருகிறது. ஆனால், பா.ஜ.,வை பற்றி பேசி கொண்டு உள்ளார்.
வித்தியாசம் தெரியாத முதல்வர்
பா.ஜ.,வும் அதிமுக.,வும் கூட்டணி அமைத்ததும், கூட்டணிக்கு அ.தி.மு.க., தலைமை தாங்கும். அ.தி.மு.க., கூட்டணி ஆட்சி அமைக்கும். முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் என அமித்ஷா சொல்லிவிட்டார். அப்புறம் எதற்கு பா.ஜ.,வை பற்றி முதல்வர் பேச வேண்டும்.அ.தி.மு.க., தான் ஆட்சிக்கு வர போகிறது. எங்களை பற்றி பேசினால் பரவாயில்லை. பா.ஜ.வை பற்றி பேசி மக்களை குழப்பி சந்தடிசாக்கில் ஓட்டு பெற்று ஆட்சிக்கு வரலாம் என ஸ்டாலின் கனவு காண்கிறார். மாநிலத்துக்கும், மத்தியில் நடக்கும் தேர்தலுக்கும் வித்தியாசம் தெரியாத தலைவர் ஸ்டாலின். தி.மு.க., ஆட்சி எப்போது அகற்றப்படும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தேர்தல் எப்போது வரும் என காத்திருக்கிறார்கள். தி.மு.க., ஆட்சியில் அனைத்து துறைகளிலும் லஞ்சம் உள்ளது. லஞ்சம் கொடுக்காமல் எதுவும் நடக்காது. கலெக்சன், கமிஷன், கரப்சன் என்பதே தாரக மந்திரமாக உள்ளது.
எச்சரிக்கை
கூட்டணி கட்சியினர், திமுக., ஆட்சி அற்புதமான ஆட்சி, நிறைய திட்டங்களை கொண்டு வந்தார் என சொல்கிறார்கள். கூட்டணி கட்சித்தலைவர்கள் உஷாராக இருங்கள். தொகுதிகளை எல்லாம் குறைத்து விடுவார்கள். நீங்கள் வேறு எங்கு போக முடியும்? அனைவரும் ஜால்ரா அடிக்கின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக நடக்கும் அக்கிரமங்களை தட்டி கேட்க கூட்டணி கட்சிகளுக்கு வக்கில்லை. விலைவாசி உயர்ந்துவிட்டது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய்விட்டது அதனை தட்டி கேட்கவில்லை.
கூட்டணி கட்சிகளுக்கு வேட்டு வைக்கிறார் ஸ்டாலின். விழுப்புரத்தில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டுக்கு அனுமதி கொடுக்க மறுக்கிறார். திருச்சியில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டுக்கு அனுமதி கொடுக்க மறுக்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி கம்பம் நடுவதற்கு அனுமதி தர மறுக்கிறார்கள். இவ்வளவு அசங்கப்பட்டு கூட்டணியில் தொடர வேண்டுமா...? கூட்டணியில் இருக்க வேண்டுமா...? கூட்டணியில் சேருபவர்களுக்கு ரத்தன கம்பளம் விரித்து வரவேற்கும் கட்சி அ.தி.மு.க., இவ்வாறு இபிஎஸ் பேசினார்.