ADDED : ஜன 04, 2025 08:51 PM
சென்னை:'பொங்கல் தொகுப்புக்காக, விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்யப்படுகிறது.
'கரும்பு விவசாயிகள், இணையதளம் அல்லது இணைப் பதிவாளர்களை தொடர்பு கொண்டு, தங்கள் கரும்பை விற்று பயன் பெறலாம்' என, கூட்டுறவு துறை தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
பொங்கல் பரிசு தொகுப்புக்கு தேவையான, கரும்பு கொள்முதல் செய்ய, மாவட்ட கலெக்டர் தலைமையில், வேளாண் இணை இயக்குனர், கூட்டுறவு சங்க மண்டல இணைப் பதிவாளர், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல், வட்டார அளவிலும் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அதன் வாயிலாக, கரும்பு கொள்முதல் நடக்கிறது.
அந்தந்த மாவட்ட விவசாயிகளிடம் இருந்து நேரடியாக, வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் வாயிலாக, கரும்பு கொள்முதல் செய்யப்படுகிறது.
எக்காரணம் கொண்டும் இடைத்தரகர்கள் மற்றும் வியாபாரிகளிடம் இருந்தோ, பிற மாநிலங்களில் இருந்தோ, கரும்பு வாங்கப்படாது.
விவசாயிகளுக்கு கரும்பு கொள்முதல் விலை, மின்னணு பரிவர்த்தனை வாயிலாக, நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
விவசாயிகள், https://rcs.tn.gov.in/rcsweb/sugarcane-form என்ற இணையதள முகவரி வாயிலாகவோ அல்லது மாவட்ட இணைப் பதிவாளர்களை தொடர்பு கொண்டோ, தாங்கள் விளைவித்த கரும்பை விற்று பயன் பெறலாம்.
இடைத்தரகர்கள், வியாபாரிகள் அணுகினாலோ, தவறான தகவல்களை பரப்பினாலோ, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.