திருமாவளவனை விமர்சிக்கக் கூடாதா?: 'வணக்கம்டா மாப்ள' பிரமுகரை சுளுக்கெடுத்த சிறுத்தை தம்பிகள்!!
திருமாவளவனை விமர்சிக்கக் கூடாதா?: 'வணக்கம்டா மாப்ள' பிரமுகரை சுளுக்கெடுத்த சிறுத்தை தம்பிகள்!!
UPDATED : நவ 27, 2024 10:48 AM
ADDED : நவ 27, 2024 10:47 AM

தேனி: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறித்து விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்ட 'வணக்கம்டா மாப்ள' புகழ் தேனி அருண் என்பவரை வி.சி.க.,வினர் நேரில் மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. விசிக.,வினர் தாக்கியதில் அருண், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன் பழநி முருகன் கோவிலில் திருமாவளவன் விஸ்வரூப தரிசனம் செய்தார். இது தொடர்பாக திருமாவளவன் கூறுகையில், ''ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சித்தர் போகர் தான் வாழ்ந்ததற்கு அடையாளமாக நவபாஷாணத்தால் ஆன முருகர் சிலையை உருவாக்கி வைத்துள்ளார்.
புலிப்பாணி சித்தர் மற்றும் அவரது வாரிசுகள் இங்கு வாழ்ந்து மறைந்ததற்கான ஜீவசமாதிகள் உள்ளன, அவற்றையும் சென்று தரிசனம் செய்தேன். எனக்கு எந்த நேர்த்திக்கடனும் கிடையாது, மொட்டை போடுவதற்காகவும், தேர்தலில் நிறைய இடங்களை வாங்கித்தா முருகா என கேட்கவும் பழநிக்கு வரவில்லை. அமைச்சர் பதவி அல்லது துணை முதல்வர் பதவி, முதல்வர் பதவி கேட்டும் முருகனை தரிசனம் செய்ய வரவில்லை. எனது முன்னோர் வாழ்ந்த இடம் என்பதால் பார்க்க வந்தேன்,'' என் பேசியிருந்தார்.
திருமாவளவன் சில ஆண்டுகளுக்கு முன், ''ஹிந்து கோயில் கோபுரங்களில் அசிங்கமான பொம்மைகள் இருக்கும். இதை வைத்து அது ஹிந்து மத கோயில் கோபுரம் என்று அறிந்துகொள்ளலாம்,'' எனப் பேசியிருந்தார். கோயில் சிலைகள் குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசிய திருமாவளவனுக்கு அப்போது கண்டனங்கள் கிளம்பின. இதுபோல் அவ்வப்போது ஹிந்து மத கடவுள்களை தொடர்ந்து விமர்சித்து பேசி வந்தார்.
வீடியோ
சமூக வலைதளங்களில் 'வணக்கம்டா மாப்ள தேனில இருந்து...' என்ற டிரேட்மார்க் உடன் ஆரம்பித்து தொடர்ந்து பேசி பிரபலமானவர் தேனியை சேர்ந்த அருண். இவர் சமீபத்தில் திருமாவளவனை விமர்சனம் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் பேசியதாவது: ‛‛கோயிலுக்கு போனீங்க, சாமியை கும்புட்டீங்க, பூசாரி ஏதோ பிரசாதம் கொடுத்தாங்க. போனவரு பேசாம வந்திரணும். அங்குள்ள சிலைகளை எல்லாம் சுத்தி பார்த்துவிட்டு, விநாயகர் அசிங்கமா இருக்காரு, முருகன் அழகா இருக்காரு என சொல்றீங்க. அது எங்கள் பேமிலி மேட்டர். நாங்க பார்த்துக்கொள்கிறோம் சாமி.
நம் கையில் உள்ள ஐந்து விரலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை; அதற்காக கையை வெட்டிக்கொள்கிறோமா? இல்லைதானே! இது போல் மற்ற மதங்களை விமர்சிப்பீர்களா'' என்று பேசியிருந்தார்.
![]() |
மிரட்டல்
அருண் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து 'வெகுண்டெழுந்த' சில விடுதலை சிறுத்தை கட்சியினர், அவர் பணியாற்றும் வாகன வாட்டர் சர்வீஸ் நிலையத்திற்கே சென்று தகராறில் ஈடுபட்டனர். தான் தவறாக எதுவும் சொல்லவில்லை எனக்கூறியும், 'எங்கள் தலைவரை விட நீ பெரியாளா?' எனக் கேட்டும் தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
தப்பா பேசல
இதனால் மருத்துவமனையில் அருண் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் இருந்தவாறு அவர் வெளியிட்ட வீடியோவில், ''நான் எதை பற்றியும் தப்பா பேசல. எல்லா கடவுளும் ஒன்னு அப்படீன்னு சொன்னதுக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 20 பேர் என்னை அடிச்சுட்டாங்க'' எனக் கூறியுள்ளார்.
இந்த வீடியோ சமூகவலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.