டில்லியில் இன்று ஸ்ரீ காந்தி ஆர்ப்பாட்டம்; ராமதாஸ் கிராமத்தில் சவுமியா விருந்து
டில்லியில் இன்று ஸ்ரீ காந்தி ஆர்ப்பாட்டம்; ராமதாஸ் கிராமத்தில் சவுமியா விருந்து
ADDED : டிச 04, 2025 05:41 AM

சென்னை: தேர்தல் கமிஷனை கண்டித்து, டில்லியில் இன்று ராமதாஸ் மகள் ஸ்ரீ காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ள நிலையில், ராமதாஸ் பிறந்த கீழ்சிவிரி கிராம மக்களுக்கு, பசுமை தாயகம் தலைவர் சவுமியா விருந்தளிக்க உள்ளார்.
பா.ம.க., தலைவராக அன்புமணியை, அங்கீகரித்துள்ள தேர்தல் கமிஷன், ராமதாஸ் தரப்பு கோரிக்கையை நிராகரித்துள்ளது. இதை கண்டித்து, டில்லி ஜந்தர்மந்தரில் ராமதாஸ் தரப்பு பா.ம.க.,வினர், ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். ராமதாசால் கட்சி செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள, அவரது மூத்த மகள் ஸ்ரீ காந்தி தலைமை வகிக்க உள்ளார்.
அதற்கு பதிலடியாக, இன்று ராமதாஸ் பிறந்த, விழுப்புரம் மாவட்டம் கீழ்சிவிரி கிராமத்திற்கு, பா.ம.க., தலைவர் அன்புமணி, அவரது மனைவி சவுமியா செல்கின்றனர்.
அங்கு, அன்புமணி எம்.பி.,யாக இருந்தபோது ஒதுக்கப்பட்ட, தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட, ரேஷன் கடை கட்டடம் திறப்பு விழாவில் பங்கேற்கின்றனர்.
ராமதாசின் குல தெய்வ கோவிலில் வழிபட்டு, கிராமத்தினர் 1,000 பேருக்கு விருந்தளிக்க, சவுமியா ஏற்பாடு செய்துள்ளார்.
டில்லியில் அன்புமணிக்கு எதிராக, அவரது அக்கா ஸ்ரீ காந்தி, இன்று போராட்டம் நடத்தும் நிலையில், ராமதாசின் சொந்த கிராமத்தில் மக்களுக்கு, சவுமியா விருந்து கொடுப்பது, கட்சியினரிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், வரும் 6ம் தேதி முதல், சவுமியா தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செல்ல உள்ளார். நுாறு சட்டசபை தொகுதிகளில், அரங்க கூட்டத்தில் பங்கேற்கிறார்.

