ADDED : அக் 13, 2024 07:44 AM
சென்னை : சித்தா, யுனானி, ஹோமியோபதி, ஆயுர்வேதா மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, வரும் 17ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், சித்தா, யுனானி, ஹோமியோபதி மற்றும் ஆயுர்வேதா மருத்துவ படிப்புகளுக்கு, 2,310 இடங்கள் உள்ளன.
இதற்கு, 6,190 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், தரவரிசை பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதில், 5,638 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
'நீட்' தேர்வு அடிப்படையில் நடக்க உள்ள மாணவர் சேர்க்கை, 17ம் தேதி துவங்குகிறது. முதல் நாளில், சிறப்பு பிரிவினர் மற்றும் 7.5 சதவீத அரசு பள்ளி ஒதுக்கீடுக்கான சேர்க்கை நடைபெறும். அதன்பின், 18, 26ம் தேதி வரை பொது பிரிவினருக்கான சேர்க்கை நடக்கும்.
இந்த சேர்க்கை, சென்னை அரும்பாக்கம் சித்தா மருத்துவமனை வளாகத்தில், நேரடி கவுன்சிலிங் முறையில் நடத்தப்படும் என, இந்திய மருத்துவ மற்றும் ஹோமியோபதித் துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
மேலும் விபரங்களை, https://tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.