ADDED : டிச 30, 2024 12:32 AM
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் இன்று தொடங்க உள்ள நிலையில், நேற்று மாலை ஏற்பாடுகளை பார்வையிட்ட பின், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:
திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறையை இணைத்து அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கிறார். பின்னர், விழா அரங்கில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்கிறார். நாளை காலை விழா அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பேசுகிறார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி மூன்று நாள் நிகழ்ச்சி இரண்டு நாட்களாக குறைக்கப்படுகிறது. இதன்படி, நாளை மாலை நடைபெற இருந்த கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு, நாளை மறுநாள் காலை நடைபெறுவதாக இருந்த கருத்தரங்கம் நாளை மாலை நடைபெறும்.
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க 749.76 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் இரண்டு மிகப்பெரிய இயற்கை இடர்பாடுகளை தமிழகம் சந்தித்துள்ளது. இதற்காக மத்திய அரசிடம், 37,906 கோடி ரூபாய் கேட்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு, 276 கோடி ரூபாய் மட்டும் வழங்கியுள்ளது. புயல் நிவாரண தொகையாக தமிழக அரசு, 2,028 கோடி ரூபாய் தன் சொந்த நிதியிலிருந்து செலவு செய்துள்ளது.
கடுமையான நிதி நெருக்கடியிலும், மகளிர் உரிமை தொகை தொடர்ந்து வழங்கப்படுகிறது. இந்நிலையிலும், முதல்வர் பொங்கல் தொகுப்பு பொருட்களுக்காக நிதி வழங்கியுள்ளார். எதிர்காலத்தில் நிதிநிலைமை சீராகும் சூழ்நிலை உருவாகும்.
மகளிர் உரிமை தொகை பொங்கல் பண்டிகையை ஒட்டி சற்று முன்னதாக வழங்க ஆலோசனை நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

