பசுமை தொழில்களுக்கு தேவைப்படுவதால் புதிய உச்சத்தை எட்டும் வெள்ளி விலை
பசுமை தொழில்களுக்கு தேவைப்படுவதால் புதிய உச்சத்தை எட்டும் வெள்ளி விலை
ADDED : அக் 22, 2024 11:47 PM
சென்னை:தங்கம் போல வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு, மின்சார வாகனம், 'சோலார் பேனல்' போன்றவற்றின் உற்பத்திக்கு வெள்ளி அதிகம் பயன்படுத்தப்படுவதே காரணம்.
இதனால், தமிழகத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் வெள்ளி விலை கிராமுக்கு, 32 ரூபாய் உயர்ந்து, 110 ரூபாய் என்ற உச்சத்தை நேற்று எட்டி உள்ளது.
தங்கம், வெள்ளி போன்றவை மதிப்புமிகு உலோகங்களாக திகழ்கின்றன. வெள்ளி விலையுடன் ஒப்பிடும்போது, தங்கம் விலை மிகவும் அதிகம்.
எனவே, தங்கம் வாங்க முடியாதவர்கள், வெள்ளி ஆபரணங்களை வாங்குகின்றனர். வெள்ளியால் செய்யப்பட்ட பூஜை பொருட்கள், பரிசு மற்றும் கலை பொருட்கள், பாத்திரங்களை பயன்படுத்துகின்றனர்.
இந்தியா உட்பட பல நாடுகளில், ராக்கெட், செயற்கைக்கோளை உள்ளடக்கிய விண்வெளி சாதனங்கள் மற்றும் வான்வெளி சாதனங்கள், மொபைல் போன் போன்றவற்றின் உற்பத்திக்கு வெள்ளி பயன்படுத்தப்படுகிறது.
எனவே, உலகளவில் மொத்த வெள்ளி உற்பத்தியில், 80 சதவீதம் தொழில் துறை தேவைக்கும்; 20 சதவீதம் மற்ற தேவைக்கும் பயன்படுத்தப்படுகிறது.
சில நாடுகளில் நிலவும் போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால், பாதுகாப்பு கருதி, உலக முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.
இதனால், உலக சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளதால், தமிழகத்திலும் 22 காரட் ஆபரண தங்கம் சவரன் விலை, 58,000 ரூபாயை தாண்டி உள்ளது.
இதேபோல, வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வெள்ளி கிராம் விலை, 110 ரூபாய் என்ற புதிய உச்சத்தை நேற்று எட்டியது.
இது, கடந்த ஆண்டின் இதே கால கட்டத்தில், 78 ரூபாயாக இருந்தது. எனவே, கடந்த ஓராண்டில் மட்டும் வெள்ளி கிராமுக்கு, 32 ரூபாய் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:
தற்போது, மின்சார வாகனங்கள், லித்தியம் பேட்டரி, சோலார் பேனல் போன்ற பசுமை தொழில் திட்டங்களில் வெள்ளி பயன்பாடு அதிகரித்து வருகிறது.
இதனால், ஏற்கனவே 80 சதவீதமாக இருந்த தொழில் துறைக்கான வெள்ளி பயன்பாடு தற்போது, 85 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதன் விளைவாகவே வெள்ளி விலை அதிகரித்து வருகிறது. கடந்த ஓராண்டில், 29 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. இது, வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.