6 பேரை பலி வாங்கிய சிங்கம்புணரி குவாரிக்கு ரூ.91 கோடி அபராதம் விதிப்பு
6 பேரை பலி வாங்கிய சிங்கம்புணரி குவாரிக்கு ரூ.91 கோடி அபராதம் விதிப்பு
ADDED : ஜூன் 18, 2025 09:37 AM

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டையில் பாறை சரிந்து ஆறு பேர் பலியான மேகா புளூ மெட்டல்ஸ் குவாரியில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் விதிமீறல்கள் நடந்தது கண்டறியப்பட்டதால் அதன் உரிமையாளர் மேகவர்ணத்துக்கு ரூ.91 கோடி அபராதம் விதித்து தேவகோட்டை சப் - கலெக்டர் ஆயுஸ் வெங்கட் வத்ஸ் உத்தரவிட்டார்.
மல்லாக்கோட்டையைச் சேர்ந்த அழகப்பன் மகன் மேகவர்ணத்தின் மேகா புளூ மெட்டல்ஸ் குவாரி செயல்படுகிறது. இந்த குவாரியில் மே 20 காலை 9:25 மணிக்கு பாறைக்கு வெடி வைக்க ஊழியர்கள் மணல் அள்ளும் இயந்திரம் மூலம் குழி தோண்டினர். அப்போது ஏற்பட்ட அதிர்வில் பாறை சரிந்து விபத்து ஏற்பட்டது.
6 தொழிலாளர்கள் பலி
இப்பாறைக்கு அடியில் சிக்கி சம்பவயிடத்திலேயே ஓடைப்பட்டி முத்தையா மகன் முருகானந்தம் 49, மேலுார் அருகே இ.மலம்பட்டி மூக்கன் மகன் ஆறுமுகம் 65, ஆண்டிச்சாமி 50, குழிச்சிவல்பட்டி கணேசன் 43, மணல் அள்ளும் இயந்திரத்தின் டிரைவர் ஒடிசாவை சேர்ந்த ஹர்ஜித் 28, ஆகியோர் பலியாகினர். பலத்த காயங்களுடன் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துாத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் மைக்கேல்ராஜ் 43, பலியானார்.
உரிமையாளர் தலைமறைவு
இவ்விபத்து குறித்து எஸ்.எஸ்.கோட்டை போலீசார் குவாரி உரிமையாளர் மேகவர்ணம், அவரது தம்பி கமலதாசன், பொறுப்பாளர் கலையரசன் 32, சூப்பர்வைசர் ராஜ்குமார் 30, உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் கமலதாசன், கலையரசன், ராஜ்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மேகவர்ணம் உள்ளிட்டோரை தேடியும் வருகின்றனர்.
குவாரியில் விதிமீறல் கண்டுபிடிப்பு
இக்குவாரியில் விசாரணை நடத்த கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டார். வருவாய் மற்றும் கனிம வளத்துறையினர் 'ட்ரோன்' மூலம் ஆய்வு செய்தனர். ஆய்வு குழுவினர் கலெக்டரிடம் அளித்த ஆய்வறிக்கையின்படி 1.50 எக்டேரில் குவாரி நடத்த அனுமதி பெற்ற மேகா புளூ மெட்டல்ஸ் குவாரி நிறுவனம், அந்த லைசென்சை பயன்படுத்தி ஏற்கனவே 3.60 எக்டேரில் குவாரி செயல்பட லைசென்ஸ் பெற்று 2024 செப்., 25 ம் தேதியுடன் காலாவதியான குவாரியிலும் கற்களை எடுத்து அரசுக்கு நிதியிழப்பை ஏற்படுத்தியது தெரியவந்தது. மேகா புளூமெட்டல்ஸ் பெயரில் இயங்கிய மற்றும் காலாவதியான 2 குவாரிகளின் லைசென்சையும் தற்காலிகமாக கலெக்டர் ஆஷா அஜித் ரத்து செய்தார்.
ரூ.91 கோடி அபராதம் விதிப்பு
தொடர் விசாரணையில் விதிமீறி காலாவதியான லைசென்ஸ் மூலம் குவாரியை நடத்தியது, நிர்ணயித்த அளவிற்கு மேல் கற்களை வெட்டி எடுத்து அரசுக்கு நிதியிழப்பு ஏற்படுத்தியதற்காக மல்லாக்கோட்டை மேகா புளூ மெட்டல்ஸ் உரிமையாளர் மேகவர்ணத்துக்கு சொந்தமான குவாரிகளில் ஓட்டு மொத்தமாக 6 லட்சத்து 15 ஆயிரத்து 324 க.மீ., கற்களை எடுத்ததற்காக ரூ.91 கோடியே 56 ஆயிரத்து 960 அபராதம் விதித்து தேவகோட்டை சப்- கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு நகலை மேகா புளூ மெட்டல்ஸ் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஒட்டினர். மேலும் உத்தரவு வெளியான நாளில் இருந்து 30 நாட்களுக்குள் அபராத தொகையை அரசுக்கு செலுத்த வேண்டும் எனவும் எச்சரித்துள்ளனர்.