வடிவேலு தொடர்ந்த வழக்கு சிங்கமுத்துவுக்கு தடை நீக்கம்
வடிவேலு தொடர்ந்த வழக்கு சிங்கமுத்துவுக்கு தடை நீக்கம்
ADDED : ஜூன் 24, 2025 06:48 AM

சென்னை : நடிகர் வடிவேலு தொடர்ந்த அவதுாறு வழக்கில், நடிகர் சிங்கமுத்துவுக்கு விதித்த தடையை நீக்கிய சென்னை உயர் நீதிமன்றம், சிங்கமுத்துவுக்கு, 2,500 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
சமூக ஊடகங்களில், நடிகர் சிங்கமுத்து அளித்த பேட்டியில், நடிகர் வடிவேலு குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து இருந்தார். அவருக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் வடிவேலு வழக்கு தொடர்ந்தார்.
அதில், 'பொதுமக்கள் மத்தியில், என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக, ஐந்து கோடி ரூபாயை மான நஷ்டஈடாக வழங்கும்படி, சிங்கமுத்துக்கு உத்தரவிட வேண்டும்.
என்னை பற்றி அவதுாறாக பேச, அவருக்கு தடை விதிக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.
சிங்கமுத்து தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படாததால், வடிவேலு தரப்பு வாதத்தின் அடிப்படையில், சிங்கமுத்துவுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதை எதிர்த்து, சிங்கமுத்து தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், 'எனக்கு, 67 வயதாகி விட்டது. உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்ததால், பதில் மனு தாக்கல் செய்ய முடியவில்லை. எனவே, தடை உத்தரவை நீக்க வேண்டும்' என்று கோரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.குமரேஷ்பாபு, தடை உத்தரவை நீக்கினார். மேலும், சிங்கமுத்துவுக்கு, 2,500 ரூபாய் அபராதம் விதித்து, அதை வடிவேலுவுக்கு செலுத்தவும் உத்தரவிட்டார்.