எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான விருதை பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க தடை
எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான விருதை பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க தடை
ADDED : நவ 20, 2024 12:40 AM

சென்னை:மறைந்த கர்நாடக இசை பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான, சங்கீத கலாநிதி விருதை, பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இசை உலகில் பிரபலமானவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி; 2004ல் மறைந்தார். இவரது பேரன் சீனிவாசன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
என் பாட்டியின் மறைவுக்கு பின் அவரது நினைவை போற்றும் வகையில், 2005 முதல், மியூசிக் அகாடமியும், ஆங்கில நாளிதழும் இணைந்து, 'சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி' விருது வழங்கப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் நடக்கும் இசைக்கச்சேரி நிகழ்ச்சியின்போது வழங்கப்படும் இந்த விருது, டிசம்பரில் நடக்கும் விழாவில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடகர் டி.எம்.கிருஷ்ணா, என் பாட்டி எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு எதிராக அவதுாறு கருத்துகளை பரப்பியவர். அவருக்கு விருது வழங்குவது அதிர்ச்சி அளிக்கிறது.
எனவே, டிசம்பரில் நடக்கும் ஆண்டு விழாவில், எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவுக்கு, மியூசிக் அகாடமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், இந்த ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க, இடைக்கால தடை விதித்தார்.
அதேநேரத்தில், எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரை பயன்படுத்தாமல் விருதை வழங்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.