ADDED : டிச 16, 2024 01:14 AM
சென்னை: பதிவுத்துறையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு, பொது இடமாறுதல் துவங்கி உள்ளது. முதல் கட்டமாக, 11 சார் - பதிவாளர்கள் மாற்றப்பட்டு உள்ளனர்.
பதிவுத்துறையில் சார் - பதிவாளர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு நிலை பணியாளர்கள், நிர்வாக காரணங்கள் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம், லஞ்ச புகார், வருவாய் இழப்பு உள்ளிட்ட காரணங்களாலும் இந்நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கு அப்பால் பணியாளர்கள், அலுவலர்கள், சொந்த காரணங்கள் அடிப்படையில், குறிப்பிட்ட சில இடங்களுக்கு மாறுதல் கோருவது வழக்கம். ஆண்டு தோறும் ஏப்., மே மாதங்களில், பொது மாறுதல் வழங்கப்படுவது வழக்கம்.
உடல் நிலை, குடும்ப சூழல் போன்ற காரணங்கள் அடிப்படையில், பணியாளர்கள், அலுவலர்கள் கேட்கும் இடங்கள் பரிசீலிக்கப்பட்டு இடமாறுதல் வழங்கப்படும்.
கடந்த 2018, 19ம் ஆண்டுகளில் பொது இடமாறுதல் தாமதமானது.
அதன்பின் கொரோனா காலத்தில், அரசு பிறப்பித்த சில தடை உத்தரவுகள் காரணமாக, பொது இடமாறுதல் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
நிர்வாக காரணங்கள் அடிப்படையில் மட்டுமே, சார் - பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
சமீபத்தில் நடந்த சீராய்வு கூட்டத்தில், பொது இடமாறுதல் குறித்து பேசாதது, சார் - பதிவாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நாமக்கல், திருப்பத்துார், சென்னை, விழுப்புரம், துாத்துக்குடி, நாகப்பட்டினம், விருதுநகர், மயிலாடுதுறை மாவட்டங்களில், 11 சார் - பதிவாளர்களுக்கு தனிப்பட்ட கோரிக்கைகள் அடிப்படையில் இடமாறுதல் வழங்கி, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டு உள்ளார்.