ADDED : ஜன 03, 2025 12:40 AM

சென்னை: பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவியிடம், சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தினர்.
சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில், டிசம்பர் 23ம் தேதி இரவு 7:45 மணியளவில், 19 வயது மாணவி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார். இது தொடர்பாக, கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன், 37, என்பவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த விவகாரத்தில், நிறைய மர்ம முடிச்சுகள் இருப்பதாகவும், முக்கிய புள்ளியை காப்பாற்றும் முயற்சி நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், சென்னை அண்ணா நகர் துணை கமிஷனர் புக்ய சினேகா பிரியா, ஆவடி துணை கமிஷனர் ஐமான் ஜமால், சேலம் துணை கமிஷனர் பிருந்தா என, மூன்று ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அடங்கிய எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இக்குழுவினர் சம்பவ இடத்தை நேற்று ஆய்வு செய்தனர். அந்த இடம் வீடியோ பதிவும் செய்யப்பட்டது. அதன்பின், பாதிக்கப்பட்ட மாணவி தங்க வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு சென்றனர். 'விசாரணைக்கு சம்மதமா; அதற்கு இந்த இடம் உகந்ததாக நீங்கள் நினைக்கிறீர்களா' என்று கேட்டு, அவரின் ஒப்புதலுடன் ரகசிய விசாரணை நடத்தினர். தனக்கு நேர்ந்த கொடுமை குறித்த அனைத்து விபரங்களையும் மாணவி தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, கைதான ஞானசேகரனிடம் பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போனில் இருந்த தகவல்களை, சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆய்வு செய்தனர்.
அப்போது, வாட்ஸாப் சாட்டிங், மொபைல் போனில் இருந்த தொடர்பு எண்கள், படம் மற்றும் வீடியோ என, அனைத்து விபரங்களையும் சேகரித்துள்ளனர்.
அதன் அடிப்படையில், சைபர் குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் உதவியுடன், தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.