கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக சிவகங்கை நிர்வாகிகள் போர்க்கொடி
கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக சிவகங்கை நிர்வாகிகள் போர்க்கொடி
ADDED : ஆக 06, 2024 04:20 AM

சென்னை: தி.மு.க., கூட்டணியை உடைக்கும் வகையில் பேசிய கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்குமாறு, ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி தலைமையில், சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் 200 பேர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் மனு அளித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், கார்த்தி சிதம்பரம் எம்.பி., பேசுகையில், 'கூட்டணி என்பதால் எப்போதும் யாரிடமும் கூனி குறுகி நிற்கவேண்டியது இல்லை' என்றார்.
பதிலடி
அதற்கு, 'தி.மு.க., கூட்டணியில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடவில்லை என்றால், அவர் டிபாசிட்டே வாங்கியிருக்க மாட்டார்' என, அக்கட்சியை சேர்ந்த முன்னாள் தலைவர் இளங்கோவன் பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி தலைமையில்,200 பேர் நேற்று, சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தனர். அவர்கள் அனைவரும் கூட்ட அரங்கத்தில் அமர வைக்கப்பட்டனர்.
கொஞ்ச நேரத்தில் அங்கு செல்வப்பெருந்தகை வந்தார். அப்போது, 'தலைமையே, கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடு' என கே.ஆர்.ராமசாமி தலைமையில் திரண்டிருந்தோர் கோஷம் எழுப்பினர். பின், செல்வப்பெருந்தகையிடம் மனு அளித்தனர்.
அதில் கூறியுள்ளதாவது: சிவகங்கையில் கார்த்தி சிதம்பரமும், அவரது ஆதரவாளரான மாவட்ட தலைவரும் இணைந்து கூட்டம் நடத்தினர். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் உட்பட நிர்வாகிகள் யாரையும் அழைக்கவில்லை. அப்படிப்பட்ட கூட்டத்தில் மாநில தலைவரான நீங்களும் கலந்து கொண்டீர்கள். இது காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வருத்தம் அளிக்கிறது.
வலியுறுத்தல்
அக்கூட்டத்தில், கார்த்தி சிதம்பரம் கட்சியை தன் சொந்த சொத்து போல நினைத்து, கூட்டணியை உடைக்கும் வகையில் பேசியிருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் அனைத்து நிர்வாகிகளுக்கும் அழைப்பு கொடுத்து, மற்றொரு கூட்டத்தை நடத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து, கே.ஆர்.ராமசாமி கூறுகையில், ''கார்த்தி சிதம்பரம் கட்சிக்கு எதிராக செயல்பட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க, மாநில தலைவரிடம் வலியுறுத்தினோம்,'' என்றார்.
சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் சிலர், 'மாநில தலைவர் முடிவை பொறுத்து, அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்குவோம். நடவடிக்கை எடுக்கப்படும் வரை எங்கள் குரல் ஓங்கி ஒலிக்கும்' என்றனர்.