கள்ளச்சாராய கும்பலுடன் தொடர்பு; ஆறு போலீசாருக்கு கட்டாய ஓய்வு
கள்ளச்சாராய கும்பலுடன் தொடர்பு; ஆறு போலீசாருக்கு கட்டாய ஓய்வு
ADDED : மார் 24, 2025 05:35 AM

சென்னை : கள்ளச்சாராய கும்பலுடன் தொடர்பில் இருந்த, போலீசார் ஆறு பேருக்கு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் எக்கியார் குப்பத்தில், 2023 மே 13ல், மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து, 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அவர்கள், புதுச்சேரி ஜிப்மர் மற்றும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி, எக்கியார் குப்பத்தைச் சேர்ந்த, 14 பேர் இறந்தனர்.
அதேபோல, மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த எட்டு பேர் இறந்தனர். இது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப் பதிவு செய்து, கள்ளச்சாராய கும்பலைச் சேர்ந்த, 15 பேரை கைது செய்தனர். இவர்களுடன் தொடர்பில் இருந்ததாக, ஆறு போலீசார், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
அதன்பின், மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டு, தொடர் விசாரணை நடந்து வந்தது. தற்போது, போலீசார் ஆறு பேரும், கள்ளச்சாராய கும்பலுடன் தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, ரோசனை, அரகண்டநல்லுார் போலீஸ் நிலைய ஏட்டுகள் வேலு, செந்தில்குமார்; காவலர்களாக பணிபுரியும், காஞ்சனுார் முத்துகுமார்; விக்கிரவாண்டி குணசேகரன்; சத்தியமங்கலம் பிரபு; கோட்டாக்குப்பம் மதுவிலக்கு காவலர் அருணன் ஆகியோருக்கு, விழுப்புரம் டி.ஐ.ஜி., திஷா மிட்டல், கட்டாய ஓய்வு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
கட்டாய ஓய்வு குறித்து, ஓய்வு பெற்ற டி.ஜி.பி., சைலேந்திரபாபு கூறியதாவது:
கட்டாய ஓய்வு வழங்கப்பட்ட போலீசாருக்கு, தற்போது வாங்கும் சம்பளத்தை கணக்கிட்டு, ஓய்வூதியம், பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். அவர்களால், ஓய்வு பெறும் வயது வரை பணியாற்ற முடியாது.
'டிஸ்மிஸ்' செய்யப்பட்டால், ஓய்வூதியம் உள்ளிட்ட பண பலன்கள் எதுவும் கிடைக்காது. குற்றத்தின் தன்மை மற்றும் வயதை பொறுத்து, இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.