கும்பகர்ணன் போல் தூக்கம்: தி.மு.க.,அரசு மீது இ.பி.எஸ்., தாக்கு
கும்பகர்ணன் போல் தூக்கம்: தி.மு.க.,அரசு மீது இ.பி.எஸ்., தாக்கு
UPDATED : டிச 21, 2024 10:47 PM
ADDED : டிச 21, 2024 10:07 PM

சென்னை:'' கும்பகர்ணன் போல் தி.மு.க., அரசு தூங்கி கொண்டு உள்ளது. எழுப்பினால் கூட எழுந்திருக்க மறுக்கிறார்கள். அதனால், சத்தம் போட வேண்டி உள்ளது,'' என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறினார்.
சென்னையில் நிருபர்களை சந்தித்த இ.பி.எஸ்., கூறியதாவது: மதுரை மேலூரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைந்தால், மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற செய்தியை 10 மாதங்களாக தமிழக அரசு சொல்லவில்லை. மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பிறகு தான் மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக 10 மாதங்கள் ஸ்டாலின் அரசு என்ன செய்தது என சட்டசபையில் கேட்டேன். அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல், மழுப்பலாக பதில் சொன்னார்கள். 10 மாத காலம் என்ன செய்தீர்கள். மக்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிந்தும், மக்களின் எதிர்ப்பை மத்திய அரசிடம் ஏன் பதிவு செய்யவில்லை என்பதே எனது கேள்வி. இதனை ஊடகங்கள் வாயிலாக நேரடியாக கேட்கிறேன். இதற்கு ஈரோடு நிகழ்ச்சியிலும் முதல்வர் பதில் சொல்லவில்லை. என்மீது தான் குற்றம்சாட்டுகிறார்.
இந்த விவகாரத்தில், யாருக்கு நல்லது செய்கிறார்கள் என தெரியவில்லை. அரசுக்கு தெரியாமல் எதுவும் நடக்காது. அரசு என்ன செய்து கொண்டு இருந்தது. யாருக்கோ நல்லது செய்ய வேண்டும் என அரசு செயல்படுகிறதா என மக்கள் கேட்கிறார்கள்.
செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு குறித்து தவறான செய்தியை பரப்புகின்றனர். அந்த ஏரியில் 30 ஆயிரம் கன அடிநீர் தான் திறக்க முடியும். ஏரி திறக்கப்பட்டதால் மக்கள் பாதிக்கப்படவில்லை. 50 செ.மீ., மழை பெய்தது. 2 நாட்களுக்கு முன்னர் ஏரிகள் நிரம்பி அடையாற்றில் ஒரு லட்சம் கன அடி நீர் வந்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தினால் தான் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
43 மாத ஆட்சியில் தி.மு.க., அரசு மத்திய பா.ஜ., அரசை எங்கு எதிர்த்தார்கள்? எதிர்க்கட்சியாக இருந்தபோது, கருப்புக் கொடி காட்டினார்கள். கருப்பு பலூன் விட்டார்கள். இன்று வெள்ளைக்கொடி காட்டுகிறார்கள்.
வெள்ளைக் கொடி வேந்தன். ' இண்டியா' கூட்டணியில் இருந்து கொண்டு கருணாநிதி நினைவு நாணயத்தை வெளியிட மத்திய அமைச்சரை அழைத்து வருகிறார்கள். இரட்டை வேடம் போடுகிறார்கள். அ.தி.மு.க., அப்படி அல்ல. எதை எதிர்க்க வேண்டுமோ அப்போது அதை எதிர்ப்போம். மக்களை பாதிக்கக்கூடிய திட்டம் தமிழகத்திற்கு வரும்போது எதிர்ப்போம்.
நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அரசு தான். ஆனால், தி.மு.க., நீட் தேர்வை எதிர்ப்பதுபோல் நாடகம் அரங்கேற்றியது. பார்லிமென்டில் ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை. சட்டம் நிறைவேற்றக்கூடிய இடம் பார்லிமென்ட். அதைக்கூட செய்ய தவறியது. முதல்வருக்கு தில், திராணி எங்கு உள்ளது. மாநில பிரச்னையை மாநில அரசிடம் தான் சொல்ல முடியும்.
நான் சத்தமாக பேசுவதாக கூறுகின்றனர். கும்பகர்ணன் போல் தூங்கி கொண்டு உள்ளீர்கள். சத்தமாக பேசி எழுப்பினால் கூட எழும்ப மறுக்கிறார்கள். அதனால், சத்தம் போட வேண்டி உள்ளது.எழுதி கொடுப்பதை தவிர முதல்வருக்கு என்ன தெரியும்?
அம்பேத்கர் குறித்து, மத்திய அமைச்சர் அமித் ஷா மட்டுமல்ல, யார் தவறான கருத்தை சொன்னாலும் தவறு தான். இதனை அன்றைய தினமே ஜெயக்குமார் தெளிவுபடுத்திவிட்டார். ரகுபதி வேட்டி மாற்றிக்கட்டி அமர்ந்துள்ளார். அங்கு அடையாளப்படுத்தி கொண்டு இருந்தால் தான் அவரது அமைச்சர் பதவி தப்பும். ரகுபதியை அடையாளம் காட்டிய கட்சி அ.தி.மு.க., நன்றியை மறந்து பேசுகிறார். அ.ம.மு.க., என்ற கப்பல் விரைவில் மூழ்கி விடும். விரைவாக மூழ்கிவிடுவார். இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.