ADDED : நவ 26, 2025 12:40 AM
சென்னை: மக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்க, மாநிலம் முழுதும், தாலுகாதோறும் தலா ஒரு சிறிய உழவர் சந்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான காலி இடங்களை விரைவாக அடையாளம் காணுமாறு, கூட்டுறவு சங்க அதிகாரிகளை கூட்டுறவுத் துறை அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில், பயிர் கடன் வாங்கி விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர்.
அவர்களிடம் இருந்து நேரடியாக காய்கறி, பழங்களை வாங்கி, மக்களுக்கு குறைந்த விலையில் விற்க, ஒவ்வொரு தாலுகாவிலும், தலா ஒரு, 'மினி உழவர் சந்தை' அமைக்க, கூட்டுறவுத்துறை முடிவு செய்துள்ளது.
இதற்கான பணிகளை கடந்த ஆண்டே துவக்க திட்டமிடப்பட்டது. பின், முதல்வர் மருந்தகம் துவக்கும் பணியை முன்னெடுத்ததால், சிறிய உழவர் சந்தை அமைக்கும் பணிகள் ஒத்தி வைக்கப்பட்டன.
தற்போது, மீண்டும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. சிறிய உழவர் சந்தையானது, 20 அங்காடிகள் இடம்பெறும் வகையில், 1,500 - 2,000 சதுர அடியில் அமைக்கப்பட உள்ளது.
இதற்காக தேவைப்படும் இடங்களை விரைவாக அடையாளம் கண்டு, பணிகளை துவக்குங்கள் என அதிகாரிகளுக்கு கூட்டுறவுத் துறை அறிவுறுத்தி உள்ளது.
ஏற்கனவே, சென்னை உட்பட சில மாவட்ட கூட்டுறவு சங்கங்களில், 60 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் வாயிலாக காய்கறி விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

